திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் பகுதியில் நீண்டகாலமாகச் சேதமடைந்த நிலையில் காணப்படும் பாலத்தின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல பிரதேசங்களுக்கான முக்கிய போக்குவரத்துப் பாதையாக விளங்கும் இப்பாலம், ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
எனினும், நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படும் இப்பாலத்தைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இப்பாலத்தைப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அதன் புனரமைப்பு அவசரத் தேவையாக மாறியுள்ளது.
அத்துடன், பாலத்தின் சேதமடைந்த நிலை காரணமாக விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், உயிரிழப்புகள் உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, குறித்த பாலத்தின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அப்பகுதிக்கு நேரில் சென்று பாலத்தைப் பார்வையிட்டார்.
இதன்போது, பாலத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதனைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்தினார்.
மேலும், குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பித்து, மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.



