வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் என அறியப்படும் தெஹிவளை சென்டோவின் பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் பல குற்றச் செயல்கள் மற்றும் மனித படுகொலைகளுடன் தொடர்புடைய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் விமானப் படையில் இருந்து தப்பியோடிய முக்கிய ஒப்பந்தத் துப்பாக்கிதாரி என்பதுடன், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள "தெஹிவளை சென்டோ" எனப்படும் பாதாள குழு உறுப்பினரின் பிரதான துப்பாக்கிதாரி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கொட்டாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதித் தடைச் சோதனையின் போது, 10,500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையை தொடர்ந்து சந்தேகநபருக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தால் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் தெஹிவளை மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு மனித படுகொலைகள் தொடர்பில் நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாகியிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி பொரலஸ்கமுவ மாலினி புளத்சிங்கல மாவத்தையில் நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிரதான துப்பாக்கிதாரிக செயற்பட்டது மேற்படி சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது. ஹோமாகம கொட்டாவ வலய குற்றத் தடுப்புப் பிரிவினால் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டு பொலிஸ் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்துக்கமைய, எதிர்வரும் நாட்களில் கல்கிஸை பகுதியில், மனிதப் படுகொலைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அத்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.