பால் உற்பத்தியில்  தன்னிறைவடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கான செயற்திட்டங்களை  முன்னெடுத்துள்ளோம். அந்த வகையில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை அமைத்தல் மற்றும் பால் களஞ்சியங்களை அமைப்பதற்காக பண்ணையாளர்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என  கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27ஃ2 பிரகாரம் எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவடைய செய்வதாக கூறியே ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வருகின்றன. எவ்வாறாயினும் நாங்கள் இது தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை தயாரித்து வருகின்றோம். 30 இலட்சம் லீட்டர் வரையிலான பாலே தினசரி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை 2030ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும் இலக்கை நோக்கியே பயணிக்கின்றோம். இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வருடத்தில் 5000 பண்ணையாளர்களை தெரிவு செய்துள்ளோம். அவர்களுக்கு மேய்ச்சல் தரைகளை உருவாக்குவதற்கு உதவிகளை வழங்குகின்றோம். கால்நடைகளை கொள்வனவு செய்தல், பண்ணைகளை அமைத்தல், பால் களஞ்சியம் ஆகியவற்றுக்கும் நாங்கள் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றோம்.

இதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பண்ணைகளுக்கும் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பசுக்களின் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் இலக்கை நோக்கியே பயணிக்கின்றோம்.

இதேவேளை வனப் பகுதிகளில் விலங்குகளுக்கு உணவுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தவாரங்களை வளர்க்கவும் விசேட வேலைத்திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகின்றோம். இதன்மூலம் யானைகள் கிராமங்களுக்குள் உள்வருவது தடுக்கப்படும் என்றார்.