முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் தொடர்பான வழக்கு மூலம் பல அரசியல்வாதிகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சேர்த்த பல சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது பல வங்கிகளின் முகாமையாளர்கள் பல கணக்குகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேர்வின் சில்வா 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொழில் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக பதவியேற்றிருந்தார்.
2 வருடங்கள் வரையிலான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தனது சட்டப்பூர்வமான வருமான வழிகளால் பெருமளவிலான சொத்துகு்களை சேர்த்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பான் ஏசியா வங்கியின் கொழும்பு கிளையில் மாத்திரமன்றி, 10 நிலையான வைப்புகளில் 1823 லட்சத்துக்கும் அதிகமான ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். இதில் உள்ள ஒரு வைப்பு மாத்திரம் 6 கோடி ரூபா பெறுமதியைக் கொண்டுள்ளது.
அத்துடன், 366, 365 மற்றும் 225 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 3 பெரிய வைப்புகளும் அங்கு காணப்பட்டுள்ளன.
இது தவிர அவர் பான் ஏசியா வங்கியில் 33 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 5 நிலையான வைப்புக் கணக்குகளைப் பராமரித்து வந்துள்ளமையும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
தனது மனைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஏ. மேரி லூசிடா சில்வா மற்றும் மகன் மாலக மனோஜித் சில்வா ஆகியோருடன் இணைந்து பல கூட்டு கணக்குகளையும் அவர் பராமரித்து வந்துள்ளார்.