தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட உறுதியற்ற நிலை காரணமாக இன்று சனிக்கிழமை (17.10.2026) முற்பகல்-11.45 மணியளவில் நாடு முழுவதும் முழுமையான மின்சாரத் தடை ஏற்பட்டது. இதையடுத்து தேசிய மின்கட்டமைப்பு செயல்பாட்டாளர் நிறுவனம் மின் விநியோகத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகளைப் படிப்படியாக முன்னெடுத்து வந்தது.
இன்று மாலை-6:30 மணியளவில் தேசிய மின் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மின்கட்டமைப்பு செயல்பாட்டாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, காலி, பதுளை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் ஏற்கனவே வழமைக்குத் திரும்பியுள்ளன. இந் நிலையில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றிரவு-09.15 மணியளவில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. எனினும், யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று இரவு-10.30 மணி தாண்டியும் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பவில்லை எனப் பொதுமக்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.