இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States) இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள், திங்கட்கிழமை (27) காலை மன்னாரிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான (மெசிடோ) நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.
மன்னாரிலுள்ள நிறுவன அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக்கலந்துரையாடலில் , வடக்கு மற்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆழ்ந்த ஆர்வத்துடன் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
மேலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு, நிலையான அபிவிருத்தி, சமூக நீதி, மனித உரிமைகள், நல்லாட்சியை பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
அதேவேளை, தற்போதைய சூழலில் வடக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், நில உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு, இளைஞர்களின் பங்கேற்பு, பெண்களின் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் சிவில் சமூக பிரதி நிதிகளால் முன்வைக்கப்பட்டன.
பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது துறைசார் அனுபவங்கள், களப் பணிகளில் இருந்து பெற்றுள்ள தகவல்கள் மற்றும் மக்களின் தேவைகளை நேரடியாக பிரதிபலிக்கும் பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.
அவற்றை அதிகாரிகள் கவனமாக கேட்டறிந்து, எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
இவ்வாறான சந்திப்புகள், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளூர் சிவில் சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி, சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான பயனுள்ள உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது.
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா அதிகாரிகள் மன்னார் மெசிடோ நிறுவனத்திற்கு விஜயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space