தற்போதை அரசியல் சூழலில் ஜனாதிபதியின் கருத்துக்கள் ஜனநாயகத்துக்கு எதிராக அமையும் போது எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக வலுவான குரல் எழுப்ப வேண்டும். ஆனால் தற்போதைய எதிர்க்கட்சிகள் எங்கே இருக்கின்றன என்பது பெரும் கேள்வியாக உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,

 ஜனாதிபதியின் கருத்துக்கள் நாட்டின் சட்டத்துக்கு முரணாக இருக்கும் போது எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் உண்மையான கடமையாகும். இருப்பினும் தற்போதைய எதிர்க்கட்சிகள் எங்கே இருக்கின்றன என்பதே ஒரு பெரிய புதிராக இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டாலும் இரு கட்சிகளினதும் தலைவர்களும் தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காகவே செயல்படுகிறார்கள். மாறாக இவரும் ஒன்றாக கைகோரத்து செயற்படமாட்டார்கள் என்பது உறுதி.

 எனவே, தற்போதைய அரசியல் சூழலில் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நேர்மையான ஒரு புதிய எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆட்சிக்கு மாற்றாக திறமையான ஒரு புதிய குழுவின் கைகளுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற வேண்டிய தருணம் இது.

தற்போதுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன போன்ற பல்வேறு கட்சிகளால் அவ்வாறான ஒரு மாற்றத்தை உருவாக்க முடியாது. அப்படியோரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. எனவே மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கூட்டணி வைப்பது என்பது மக்களின் எதிர்பார்ப்புக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.