ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும் புதிய ஜனநாயக முன்னனி கட்சியின் தற்போதைய செயளாலருமான ஷமிலா பெரேரா கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து  கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் அசங்க எஸ். போதரகம  இன்று (30) உத்தரவிட்டார்.

இன்றைய தினம் பிற்பகல்  பத்தரமுல்ல பெலவத்த பகுதியைச் சேர்ந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷயாமிலா பெரேரா, உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஷமிலா பெரேரா தலைவராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகவும், எவ்வித வெற்றிடங்களுமின்றியும் இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவி அதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு நியமனங்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அன்றைய தினங்களில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணிக்குழாமில் சேவைக்காக அமர்த்தப்பட்டிருந்தவர்களுக்கே  இவ்வாறு நியமனம்  வழங்கப்பட்டுள்ளதாக, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இதன் மூலம் தேசிய லொத்தர் சபைக்கு இந்த அதிகாரிகளிடமிருந்து எவ்வித சேவைகளும் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை லொத்தர் சபையின் நிதியிலிருந்தே செலுத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரச   நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தமைக்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்  அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேக நபர்  கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து,  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ ஆகியோர் மன்றில் முன்வைத்த சாட்சியங்களை பரிசீலனை செய்த நீதிவான் சந்தேகநபருக்கு பிணைவழங்கி உத்தரவிட்டார்.

அதற்கமைய சந்தேகநபரை   தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து,  வெளிநாட்டு செல்லவும் பயணத்தடை விதித்து நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் சந்தேக நபர் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், பிணையில் சென்ற பின்னர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதிலிருந்து விலகியிருக்குமாறும்  அவர்  எச்சரிக்கை விடுத்தார்.