அமெரிக்காவின் ஹவாய் தீவின் பிரபல எரிமலை தேசிய பூங்காவில் அமைந்திருந்த சுமார் 90 அடி உயரமும் 550 ஆண்டுகள் பழமையும்கொண்ட 'ஹோலெ கடல் வளைவு' பசிபிக் பெருங்கடலில் சரிந்து வீழ்ந்து முற்றாக அழிந்துள்ளது.

அமெரிக்க தேசிய பூங்கா சேவையின் தகவலின்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை கடலோரத்தில் கம்பீரமாகக் காட்சியளித்த இந்த எரிமலைப் பாறை அமைப்பு, செப்டெம்பர் மாதம்  27 ஆம் திகதிக்குள் முற்றாக கடலுக்குள் மூழ்கி மறைந்துள்ளது.

கடந்த வாரம் ஹவாய் பகுதியை அச்சுறுத்திய 'நோலோ' வெப்பமண்டல புயலின் போது ஏற்பட்ட பலத்த அலைகள் மற்றும் சீற்றமான வானிலையினால் இந்த வளைவு உடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட 'கிலாயுயா' எரிமலை வெடிப்பு மற்றும் பூகம்பங்கள் காரணமாகவே பாறைகளின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுப் பெரிய விரிசல்கள் தோன்றின.

பாறைகள் ஆபத்தான நிலையில் இருந்ததால் 2020 ஆம் ஆண்டிலேயே பார்வையாளர்கள் அணுகும் பகுதி மாற்றப்பட்டது. "இந்த அழகு தற்காலிகமானது, காலப்போக்கில் உடைந்து போகும்" என பூங்கா நிர்வாகம் 2021 இல் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

ஹவாயின் 'பிக் ஐலேண்ட்' பகுதிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் பிரதான ஈர்ப்பு மையமாக விளங்கிய இப் பாறை அமைப்பின் மறைவுக்கு, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் சமூக ஊடகங்களில் தங்களது நினைவுகளையும் புகைப்படங்களையும் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.