உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?

இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட ஒன்று. அனைத்து மதங்களிலும் தங்களின் நம்பிக்கைகள் வெல்ல வேண்டும் என்பதற்காக தங்களின் விருப்பமான தெய்வத்துக்காக மக்கள் உண்ணாநோன்பு இருப்பது வழக்கம்

ஆனால், ஒரு கோரிக்கை நிறைவேற ஒருவர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்க அரசு முயற்சி எடுப்பது ஏன்?

ஆங்கிலேயருக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய போராட்டங்களில் மிக வலிமையானது உண்ணாவிரதப் போராட்டம்.

உண்ணாவிரதம் என்பது அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கு எதிராக தார்மிக ரீதியில் போராட்டக்காரர்கள் அளிக்கும் அறவழி அழுத்தம். இதை போராட்டக்காரர்கள் கையாளும்போது, நிராயுதபாணியாக இருக்கும் அவர்களிடம் அரசாங்ம் சமாதானம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை.

சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 21 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை ஜூலை 18-ம் தேதி டெல்லி போலீஸார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொண்டு சென்றனர்.

ஜனநாயகத்தில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதில் முதன்மையானது உண்ணாவிரதப் போராட்டம். இதை நீதிமன்றமே பலமுறை ஆதரித்துள்ளது. ஜனநாயக வழியில் போராடுவதற்கு சட்டப்பூர்வ வழிமுறை உண்ணாவிரதம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால், அதை நடத்தும்போது போராட்டத்தில் ஈடுபட்டவர் வலுக்கட்டாயமாக அகற்றப்படும் நிலைமையும் இருக்கிறது.

உண்மையில் உண்ணாவிரதம் இருக்க சட்டத்தில் இடமிருக்கிறதா, போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்க முடியுமா என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சோனம் வாங்சுக் விவகாரம்:

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவில் ‘வான்சுக் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமடைவதால் உடனடியாக மருத்துவர்கள் தலையிட வேண்டும், தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக உணவு அளிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டு இருந்தது.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதிகள் தேஜாஸ் கரியா ஆகியோர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘வான்சுக் உடல்நலத்தை அரசு மருத்துவர்கள் மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும், தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ உதவிகளை மருத்துவர்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் உயிரும் மிகவும் உயர்ந்தது’ எனத் தெரிவித்தது. அதேசமயம், சோனம் வான்சுக்குக்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை.

சட்டபூர்வமாக செல்லுபடியாகுமா?

இந்தியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருவர் மேற்கொள்ள இந்தியச் சட்டங்களில் தடை ஏதும் இல்லை. நமது அரசியலமைப்புச் சட்டம் 19(1) பிரிவு பேச்சுரிமை மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையும், பிரிவு19(1)(பி) அமைதியாக மக்கள் கூடுவதற்கான உரிமையையும் வழங்குகிறது.

இதில் உண்ணாவிரதப் போராட்டம் என்பது அறவழியில் அமைதியாக நடத்தும் அரசியல்ரீதியான போராட்டம். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

ஜனநாயகத்தில் அமைதியான முறையில் ஒருவர் எதிர்ப்பைத் தெரிவிக்க உண்ணாவிரதப் போராட்டம் என்பது பாதுகாக்கப்பட்ட வழிமுறை என்று உச்ச நீதிமன்றமே பலமுறை கருத்துத் தெரிவித்துள்ளது. அதேசமயம், அரசியலமைப்பின் பிற அம்சங்களான பொது அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிந்ததைக் கூட நீதிமன்றம் ரத்து செய்த சம்பவங்கள் உள்ளன. உண்ணாவிரதம் என்பது தற்கொலை முயற்சி அல்ல. அரசியலமைப்புச் சட்ட ரீதியாக ஏற்கப்பட்ட ஒரு போராட்ட வடிவம் என்று உச்ச நீதிமன்றமே கருத்துத் தெரிவித்துள்ளது.

ராம்லீலா மைதானத்தில் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘காந்தியடிகள் கடைபிடித்த சத்யாகிரகப் போராட்டத்தின் ஒருவடிவமாகவே உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறது. ஆதலால், இதை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூற முடியாது’ எனத் தெரிவித்தது.

அரசு தடுப்பது ஏன்?

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் எந்த அளவு உரிமை அளித்திருக்கிறதோ, அதே அரசியலமைப்புச் சட்டம்தான், ஒருவரின் உயிரைக் காப்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக வரையறுத்துள்ளது.

2024-ம் ஆண்டு பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜகத் சிங் தலேவால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘உண்ணாவிரதம் இருக்கும் நபரின் உயிரைக் காப்பது அரசாங்கத்தின் தார்மிகப் பொறுப்பு. அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வற்புறுத்தாமல், அவருக்கு மருத்துவ உதவிகளை அரசு வழங்கலாம்’ எனத் தெரிவித்தது.