கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளதோடு, திருகோணமலையில் தமிழரசுக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன முன்னிலை பெற்றுள்ளன.
அதேபோன்று அம்பாறையில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழ் பேசும் பகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
எனினும், திருகோணமலை, அம்பாறையின் சிங்களப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே ஆதிக்கம் செலுத்தி வருவதோடு ஐக்கிய மக்கள் சக்தியும் சபையொன்றில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு சபைகளிலும் ஆட்சி அமைப்பதில் அறுதிப்பெரும்பான்மை இன்மையால் இழுபறியான நிலைமைகள் அதிகமேற்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கட்சிகளின் நிலைமைகள் வருமாறு,
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 16 ஆசனங்களையும், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 13 ஆசனங்களையும் கோரளைப்பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும், மண்முனை பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் மண்முனை மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் போரதீவு பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும் பெற்று முன்னிலையில் உள்ளது.
தமிழரசுக்கட்சி மண்முனைப் மேற்கு பிரதேச சபையில் மாத்திரம் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளதோடு ஏனைய சபைகளில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒத்துழைப்புடனேயே ஆட்சி அமைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபையில் அறுதிப்பெரும்பான்மையுடன் 10ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 7ஆசனங்களைப் பெற்ற முன்னிலையில் உள்ளது.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளதோடு அக்கட்சி ஏனைய அனைத்து சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது.
கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி 8ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளபோதும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் முன்னிலை பெற்றுள்ள தரப்பினர்கள் ஏனைய தரப்பினருடன் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்குரிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டம்
திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கறைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதோடு சம்மாந்துறை பிரதேச சபையையும், நிந்தவூர் பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அம்பாறை நகரசபையிலும், தெஹியத்தகந்திய பிரதேச சபையிலும், தமன பிரதேச சபையிலும், உஹன பிரதேச சபையிலும், மஹா ஓயா பிரதேச சபையிலும், நமலோயா பிரதேச சபையிலும், பதியத்தலாவ பிரதேச சபையிலும் ல{ஹகல பிரதேச சபையிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இலங்கைத் தமிழரசுக்கட்சி நாவிதன்வெளி பிரதேச சபையிலும், ஆலையடிவேம்பு பிரதேச சபையிலும், காரைதீவு பிரதேச சபையிலும் முன்னிலை பெற்றுள்ளதோடு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச சபையிலும், பொத்துவில் பிரதேச சபையிலும், அட்டளைச்சேனை பிரதேச சபையிலும் திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றும் முன்னிலை பெற்றுள்ளன.
எனினும் இந்த சபைகளிலும் கூட்டணிகளை அமைப்பதன் மூலமே ஆட்சியை அமைத்துக்கொள்ளக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக்கட்சி திருகோணமலை மாநகரசபையில் 9ஆசனங்களையும், வெருகல் பிரதேச சபையில் 8ஆசனங்களையும் திருகோணமலை நகர சபையில் 6ஆசனங்களையும் மூதூர் பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்று முன்னிலையில் உள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகரசபையில் மட்டும் 4ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
தேசிய மக்கள் சக்தி சேருவில பிரதேச சபையில் 7ஆசனங்களையும் கந்தளாய் பிரதேச சபையில் 10 ஆசனங்களையும் மொரவௌ பிரதேச சபையில் 9ஆசனங்களையும் கொமரன்கடவல பிரதேச சபையில் 9 ஆசனங்களையும் பதவிஸ்ரீPபுர பிரதேச சபையில் 9ஆசனங்களையும் தம்பலகமுவ பிரதேச சபையில் 3 ஆசனங்களையும் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குச்சவெளி பிரதேச சபையில் 5ஆசனங்களையும், கிண்ணியா பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்று முன்னிலையில் உள்ளது.