சீதா ரஞ்சனி: கருத்துச் சுதந்திர பெண் போராளி

ஊடகத்துறையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சீதா ரஞ்சனி தனது எழுத்தாற்றல் மூலம்  மூன்று தசாப்தகாலமாக  ஊடகச் சுதந்திரத்திற்காக போராடி வரும்  போராளி. இப்போதும் சுதந்திர ஊடகவியலாளராக இருந்து எழுத்தினூடாக தனது ஆழமான கருத்துகளை சமூகங்களுக்கு சொல்லும் இவர், சுகயீனமுற்ற நிலையில் இருக்கிறார். இந் நிலையிலும் தினகரன் வார மஞ்சரியோடு தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
நான் புனித பூமியான அநுராதபுரத்தில் பிரிமியன் கொலம்ப என்ற ஊரில் பிறந்தேன். ஊரிலுள்ள அசோக மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றேன். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வைத்து எனக்கு வேறு பாடசாலைக்கு போகும் வாய்ப்பும் இருந்தது. ஆனாலும் நான் போக விரும்பவில்லை.
அக் காலத்தில் எழுதுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட வில்லை. ஆனாலும் நான் சிறுவயதிலிருந்தே நிறைய வாசிப்பதால் எழுதுவதற்கு தூண்டப்பட்டேன். பாடசாலை செல்லும் காலத்திலேயே நான் நினைக்கிறேன் தருணி, சரசவி போன்ற பத்திரிகைகளுக்கும் எழுதினேன். அதைத் தவிர கவிதைகள் எழுதி என் பாடசாலை ஆசிரியர்களுக்கு காட்டுவேன். அப்படி எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆசிரியர் என்னை போட்டி ஒன்றுக்கு கவிதை எழுதும் படி ஊக்குவித்தார். 1972ம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லும் காலம். அந்தக் கவிதை அநுராதபுரத்தில் 1வது இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு தொடர்ந்து கவிதை எழுதத் தொடங்கினேன். அது மட்டுமல்லாது பாடசாலையில் சிறு பத்திரிகைகளுக்கும் எழுதினேன். 1970களில் வானொலிக்கு வர்ணணை செய்தேன். இவ்வாறு தான் சிறு வயதிலேயே எழுத்துத் துறையில் இணைந்தேன்.
நான் நினைக்கின்றேன், அன்றும் இன்றும் எனது வாழ்க்கை எழுத்துத் துறையிலேயே தான் இருந்தது. கொழும்பில் நான் வானொலிக்கு எழுதிக்ெகாண்டிருந்த போது விளம்பரம் ஒன்றில் ரஜரட்ட பிராந்திய வானொலி ஆரம்பமாக விருக்கின்றது என்ற தகவலை அறிந்தேன். அப்போது நான் எனது முதல் சிறுகதையை அதில் உள்ள விலாசத்திற்கு அனுப்பி வைத்தேன். 1979 ஏப்ரல் 12ம் திகதி ரஜரட்ட வானொலி சேவை ஆரம்பமாகியது. 18ம் திகதி எனக்கு டெலிகிராம் மூலமாக அன்றே ரஜரட்ட சேவைக்கு வரும்படி அழைத்திருந்தனர். அங்கு சென்ற போது நான் எழுதிய சிறுகதையை எனக்கே வர்ணணை செய்யும் படி சொன்னார்கள். பிறகு நான் எழுதிய சிறுகதைக்கும் அதை வர்ணணை செய்ததற்கும் எனக்கு பணம் தந்தார்கள். அப்போது தான் எழுத்தின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதினேன். நான் ஒரு பத்திரிகையாளராக வருவேன் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்ற ஒரு ஆசை என்னிடம் இருந்தது.
அத்தோடு தொடர்ச்சியாக வானொலிக்கு பல ஆக்கங்களை எழுதினேன். அக்காலத்தில் ரஜரட்ட சேவைக்கும் அதிக ஆக்கங்களை எழுதினேன். என்னுடைய அனைத்து ஆக்கங்களும் ஒலிபரப்பப்பட்டன. சிறுகதை மட்டுமல்ல சிறுவர் நாடகம், வானொலி நாடகம், மகளிர் நிகழ்ச்சிகள் பாடல்கள் கூட நிறைய எழுதினேன். சமூகத்தின் பார்வையில் என் ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மக்களின் உரிமைகள், சமூக பிரச்சினைகளை ஆழமான கண்ணோட்டத்தில் வழங்கினேன். வானொலிக்கு எழுதி கொண்டிருந்த போது ‘விவரண’ என்ற ஒரு சஞ்சிகை தொடங்கியது. அவர்கள் என்னை கொழும்பில் வந்து எங்களுடன் வேலை செய்ய முடியுமா என்று தெரிந்தவர்கள் மூலமாக  அழைப்பு விடுத்திருந்தனர். 1980களில் ‘விவரண’வில் எழுத தொடங்கினேன். இன்று 37 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சமூகத்திலுள்ள பிரச்சினைகள், உரிமைகள், பெண்களுக்கு நிகழும் அநீதிகள், பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதில் நான் கூடிய அக்கறை கொண்டிருந்தேன். கொழும்புக்கு வந்தவுடன் முற்போக்கு ஊடகத்துறையில் இணைந்து கொண்ட நான் என்னிடமிருந்த சிந்தனைபோக்கு, விருப்பு, வெறுப்புக்கள் போன்றவற்றை நோக்கிச் செல்லும் வழி இன்னும் விரிவடைந்தது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவதை விடுத்து என் நோக்கம் மக்களுக்கு ஒரு சிறந்த நாட்டை வழங்குவதுடன் அந்ததந்தத் துறைகளுக்கு ஊடகத்தால் ஆற்ற முடியுமான என் பங்களிப்பை வழங்கினேன். பல புத்தகங்களையும் எழுதினேன். அதற்காக ஒரு தொழிலை கூட செய்யாமல் சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டேன், செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஜனநாயகம், நல்லாட்சியை ஏற்படுத்த நாம் மும்முரமாக வேலை செய்தோம். மனித உரிமை, மகளிர் உரிமை போன்றவற்றை பாதுகாக்க முன்னிட்டு போராடினேன். முற்போக்கு எழுத்துத்துறை என்பது எங்களது ஒரு உரிமை. உண்மைக்காக போராடும் நிலையாகும். ஒரு தலைமையின் கீழ் நிறுவனத்துக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்வதை எழுதி விட்டு சம்பளம் வாங்குவது என்னால் செய்ய முடியாத காரியமாகி விட்டது. சமூகத்துக்காக, உரிமைக்காக, உழைக்கும் வர்க்கத்துக்காக முற்போக்கு எழுத்து மூலம் நியாயத்தை தொடர்வேன்..
தினகரன் – 05.03.2017