போருக்குப் பின்னரான இலங்கைத்தீவு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இதில் பாரிய பிரச்சினையாகக் கோலோச்சி நிற்பது, வயது வேறுபாடின்றி நாட்டு மக்கள் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்கும் துன்பியல் நிகழ்வாகும். இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொள்வோரின்; எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 28.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் இத்தகைய மரணம் 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 40 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தவறான முடிவெடுப்பதால் ஏற்படுகின்றன. இதில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் அதிகளவு மரணங்கள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடம் பிடித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் – 10 ஆம் திகதி உலக தற்கொலைத் தடுப்புத் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு விழிப்புணர்வூட்டப்படுகிறது. இது 2003 ஆம் ஆண்டிலிருந்து அனு~;டிக்கப்பட்டு வருகிறது. “தற்கொலை பற்றிய கதையை மாற்றுதல்” என்பது இவ்வாண்டுக்கான உலக தற்கொலைத் தடுப்புத் தினத் தொனியாகும். இந்தக் கருப்பொருளானது களங்கத்தைக் குறைப்பதன் முக்கியத்துவம் மற்றும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பதனைத் தடுக்கத் திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தல்
தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தல் (ளரiஉனைந) என்பது, சுயவிருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். ஒரு மனிதன் தனிப்பட்ட அல்லது பொது நோக்கம் கருதித் தானாகவோ அல்லது பிறரால் தூண்டப்பட்டோ தனது உயிரை மாய்த்துக்கொள்வதாகும். இத்தகைய பொது நோக்கம் கருதிய மரணங்களுக்கு போரில் கையாளப்படும் தற்கொடைப்படைத் தாக்குதல்களைச் சான்றாகக் கூறமுடியும்.
ஒரு மனிதன் தனிப்பட்ட ரீதியில் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்குப் பின்வரும் உயிரியல், உளவியல், சமூகக் காரணிகள் வலுவான செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றுள் அவமானம், ஆளுமைச் சிதைவு, இணையத்தள வன்முறைகள், இயலாமை, ஏமாற்றம், கடன் சுமை, கடுமையான உடல் மற்றும் உளவலி, குற்றவுணர்வு, குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பித்து, மது மற்றும் போதைப்பொருள் பாவனை, வெட்கம், தோல்வி மனப்பாங்கு, பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலின்மை, தனிமை, பயம், வறுமை போன்றனவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் ஒன்றோ பலவோ ஒருவரை இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொள்வதற்குத் தூண்டுகின்றன என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து சிக்மன் புறொயிட் கூறும்போது,
“மனித மனதில் வாழவேண்டும் என்ற ஆசையும், சாக வேண்டும் என்ற விருப்பமும் அடிப்படை உணர்ச்சிகளாகத் தொழிற்பட்டு மனிதனை எதிர்த்திசையில் இழுத்துக்கொண்டும் ஒன்றையொன்று ஆதிக்கம் செய்யச் சண்டையிட்டுக்கொண்டும் உள்ளன. ஏதேனும் சில காரணங்களால் சாக வேண்டும் என்ற விருப்பம் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையை வெற்றிகொள்ளுமாயின், மனிதனின் வாழ வேண்டும் என்ற ஆசை குறைந்து பயனற்றுப் போய்விடுகின்றது. இதன் விளைவாகச் சாவதுதான் ஒரு சிறந்த வழிமுறை என்ற முடிவுக்கு வருகின்றான்” என்கிறார்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் சுமார் எட்டு இலட்சம் நபர்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொள்வதாக அறியமுடிகிறது. அதன்படி உலகளவில் 40 நொடிக்கு ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பதாகக் கூறப்படுகிறது.
தவறான முடிவெடுப்போரை எவ்வாறு இனங்காண்பது?
தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் எண்ணம் உடையவர்கள் தமது எண்ணத்தை மிக நெருங்கியவர்களிடம், மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூறுகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் பாராமுகமாக இருக்காமல் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். அவர்களுக்குப் புத்திமதிகளைச் சொல்லி ஆற்றுப்படுத்த வேண்டும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சகபாடிகள், அயலவர்கள் – இவர்களுடன் கதைக்கும்போது இவர்கள் உச்சக்கட்ட விரக்தி, வெறுப்புடன் காணப்பட்டால், இவர்களுக்குள் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்கும் எண்ணங்களும் சேர்ந்து குடிகொண்டிருக்கும். ஆதலால், பிரச்சினைகளோடு இருப்பவர்களின் கதைகளை உங்கள் இருசெவி கொண்டு செவிமடுங்கள். இதுவே மிகப்பெரிய இடையீடாகும். இதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் நட்புறவு நம்பிக்கையைக் கட்டி வளர்க்கும். இதனூடாகப் பாதிக்கப்பட்ட நபர் தனது பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவும்.
மேலும், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களில் இருந்து வெளிவருவதற்குத் தமக்கு உதவிசெய்யும் நல்லுள்ளங்கள் கூடவே உள்ளார்கள் என்ற நம்பிக்கை துணைநாடிக்கு ஏற்படும். அந்த நம்பிக்கை அவர்களின் எதிர்கால வாழ்வின் வெளிச்சமாகும். இதற்கு உளவள ஆலோசகர்களோ, உளநல மருத்துவ நிபுணர்களோ, உளநலத்துறை சார்ந்தவர்களோ தேவையில்லை.
தவறான முடிவெடுப்போரின்
நடத்தையும் அறிகுறிகளும்
இன்றைய மனிதர்கள் இதயங்களுடன் பேசும் நேரங்களை விட, இயந்திரங்களுடன் பேசும் நேரங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. இவர்கள் கனவுலகில் இருப்போருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், கண்முன் இருப்போருக்குக் கொடுப்பதில்லை. கைபேசி முதல் கணினி வரை இவர்களைக் கட்டிப்போட்டு ஆட்சி செய்கிறது. இத்தகைய மாய மனிதர்கள் மத்தியில் வாழ்வோர் தம்முடன் கதைப்போரும் இல்லை, தம் கதைகளைக் கேட்போரும் இல்லை எனும் தனிமைத்தீவுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கின்றனர்.
மனம் விட்டுப் பேச ஒருவர் கிடைத்துவிட்டால், மகிழ்ச்சி மரணிப்பதில்லை. மனங்கள் வாடுவதில்லை. பிரச்சினைகள் பூதாகரமாவதில்லை. அவ்வாறு பேசிக்கொள்ள ஒருவர் இன்மையால் பெருமளவானோர் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். தமது பிரச்சினைகளுடன் அலைமோதுகின்றனர். ஒருகட்டத்தில் தவறான முடிவெடுத்துத் தமது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இதில் பெரியவர் சிறியவர், படித்தவர் பாமரர் என்ற பேதம் கிடையாது. ஏனென்றால், வலி அனைவருக்கும் பொதுவானது. இவ்வாறு மரணிக்க முயற்சிப்போரின் நடத்தையும் அறிகுறிகளும் பின்வருமாறு காணப்படும்.
01. எப்போதும் மரணத்தைப் பற்றிப் பேசுவதும் இறக்க விரும்புவதும்
கவலையுடன் அல்லது பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதும்.
02. குடும்பம் மற்றும் நண்பர்களிடம் விடைபெறுதல்.
03. தன்னைத் தானே தனிமைப்படுத்துதல்.
04. மது மற்றும் போதைப்பொருட்களை அதிகமாக உட்கொள்வது.
05. வாழ்க்கையைத் தொடர எந்தக் காரணமும் இல்லை என்ற உணர்வு மேலோங்கல்
அல்லது வாழ்க்கை மீது பிடிப்பின்மை.
06. உறக்கப் பிரச்சினையை அனுபவித்தல்.
07. துப்பாக்கிகள், மாத்திரைகள் போன்ற பொருட்களை வாங்குதல்.
08. எந்நேரமும் பரபரப்பாக உணர்தல்.
09. பசியின்மை.
10. அதிக மனச்சோர்வுடன் காணப்படல்.
உலகளவில் மனிதர்கள் தமது தற்காலிகப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக எடுக்கும் விபரீத முடிவே தவறான விதத்தில் உயிரை மாய்ப்பதாகும். ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வாகத் தன் உயிரை மாய்ப்பதால் யாருக்கும் எந்தவித நன்மையும் கிடைப்பதில்லை. மாறாக, அவ்வண்ணம் உயிர் மாய்த்தவரின் உறவினர்களுக்கு அது தீராவலியையும், அவர்களும் அவ்வழியைப் பின்பற்றுவதற்கான வழியையுமே விட்டுச் செல்லும் எச்சமாக அந்த உயிர் மாய்ப்புக் காணப்படுகிறது.
உயிர்மாய்ப்புத் தடுப்பிற்கான உதவிகளும் படிமுறைகளும்
ஒரு மனிதன்; பிரச்சினையை எதிர்நோக்குகின்ற பொழுது, அப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கு நினைக்கின்றான். ஒரு பிரச்சினை உருவாகின்ற பொழுது அதற்கான தீர்வும் நிச்சயமாக இருக்கும். பலருக்கும் அத் தீர்வினைக் கண்டறிவது கடினமான ஒன்றாக இருக்கின்றது. ஆதலால், அவர்கள் தமது வாழ்வில் நல்ல முடிவினை எடுப்பதற்கும், அவர்களுக்குள் மறைந்திருக்கும் பலங்களை அடையாளம் காண்பதற்கும் உளவளத்துணை உதவி புரிகின்றது.
ஒரு காலத்தில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் முயற்சி சட்டத்தின் முன் குற்றமாகப் பார்க்கப்பட்டது. தற்போது அது, மனநல சிகிச்சை வழங்கப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்று கருதப்படுகிறது. இ;வ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளைக் கொண்ட ஒருவருக்குச் சிகிச்சையளிப்பதற்கான முதல்படி, அவர்களை மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்வதாகும்.
இத்தகைய மனநிலை கொண்ட ஒருவருக்கு அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மிகவும் பயனுள்ள சிகிச்சை என்று கூறப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் உளவியலாளர் எதிர்மறைச் சிந்தனை முறைகளை அடையாளம் கண்டு, அவற்றை நேர்மறை மற்றும் பகுத்தறிவு கொண்டதாக மாற்ற முயற்சிப்பார். துணைநாடிக்குப் பின்வரும் உதவிகளைச் செய்வார்.
01. துணைநாடியின் கதைகளைக் கேட்டறிதல்.
02. வாழ்க்கைக்குத் தேவையான பிரச்சினை தீர்த்தல் திறன்களைக் கற்றுக்கொடுத்தல்.
03. குடும்ப உறவுகளிடையே சரியான புரிந்துணர்வு, தொடர்பாடல், பிரச்சினைகளைத் பேசித் தீர்த்தல் போன்ற ஆரோக்கியமான வழிவகைகளைப் பேணச் செய்தல்.
04. நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசச் செய்தல்.
05. சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடச் செய்தல்.
06. கை வேலைகளைக் கற்றுக்கொடுத்தல்.
07. பிரச்சினைகள் ஏற்படும் போது துறைசார் அலுவலர்ளுடன் இணைத்து விடல்.
08. தியானம், யோகாசனம் போன்றனவற்றில் ஈடுபடச் செய்தல்.
09. ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்யத் தூண்டுதல்.
10. மனநலம் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களை 1926 எனும் தேசிய மனநல உதவித் தொலைபேசி இலக்கத்துடன் ஆற்றுப்படுத்தலுக்காகத் தொடர்புபடுத்தி விடுதல்.
வருடாந்தம் உலகளவில் 20 மில்லியன் மக்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பதற்கு முயற்சி செய்கின்றனர் எனவும் 7,3000 பேர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்கின்றனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு நூறு மரணங்களிலும் ஒருவர் தவறான முடிவெடுத்து மரணமாகிறார். இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பவர்களில், ஆண்கள் பெண்களிலும் மிக அதிகமாகக் காணப்படுகின்றனர். இதில், தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொள்வதில் மனச்சோர்வு நோய் முதன்மைப் பங்களிக்கிறது. உலக சனத்தொகையில் 25 – 30 வீதமானவர்கள் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.
வலிகளை வலிமையாக்கி வாழ்ந்து காட்டுங்கள்!
மானுடப்பிறவி கிடைத்தற்கரிய பிறவி. இயற்கையின் படைப்பில் மனித இனம் வியப்பிற்குரியது. உடல் அமைப்பும் மூளைத்திறனும் பேசும் ஆற்றலும் மனித இனத்திற்கு மட்டுமே இயற்கை அளித்த அற்புத கொடை. எத்தனை கோடி ரூபாக்களைக் கொட்டிக் கொடுத்தாலும் செயற்கையாக ஒரு மனிதனை உருவாக்கிவிட முடியாது. இத்தகைய மதிப்புமிக்க மனித உயிரை அற்ப காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டுக் கணநேரத்தில் அழித்துவிட நினைப்பது கோழைத்தனமான செயல்.
வாழ்க்கையில் பிரச்சினைகள் ஆக்கிரமித்து எம்மை அடுத்த அடி நகரவிடாமல் செய்யும் வேளைகளில், “ஏன் வாழ வேண்டும்?” என்று கேள்வியெழுப்பாமல், “ஏன் சாக வேண்டும்?” என்ற வினாவை எழுப்பினால், தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க வேண்டும் என்ற எண்ணங்களே வலுவிழந்து போகும். சாவதற்கு எடுக்கும் துணிச்சலை வாழ்வதற்குக் காட்டினால், வானங்களும் பிளந்து வழிவிடும்.
வாழ்வில் எத்தகைய துயர் மேகங்கள் சூழ்ந்துகொண்டாலும், “இதுவும் கடந்து போகும்” என்ற தாரக மந்திரத்தை எப்போதும் நினைத்துக்கொள்ள வேண்டும். தாங்க முடியாத துயரங்களுக்கு விடுதலை கொடுப்பது மரணத்தால் மட்டும்தான் சாத்தியம் என்றால், உலகில் பாதிக்கு மேல் மனிதர்கள் இறந்திருக்க வேண்டும். வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, சவால்களைச் சமாளித்து, நாங்களும் இப்பூவுலகில் சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிரிடும் தடைகளைத் தகர்த்தெறிந்து, வலிகளை வலிமையாக்கி வாழப் பழக வேண்டும். பிறந்துவிட்டோம் – எப்படியும் இறக்கலாம் என்பதை விடுத்து, இனிமேல் பிறக்கப்போவதில்லை என்று நினைத்து வாழ வேண்டும்.
மல்லிகா செல்வரத்தினம்