அக்கரைவெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச் செல்ல முடியாமல் அவதியுறும் விவசாயிகள் ; ரவிகரன் களவிஜயம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடைசெய்யப்பட்ட 5000 வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாமல் வயல்வெளிகளிலும் வீதிகளிலும் நீண்ட நாட்களாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக அப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு நிலைமைகளைச் சீர் செய்வதற்கு தம்மால் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதியினைச் சேர்ந்த விவசாயிகளும் திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமமான தென்னமரவடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கரைவெளி விவசாய நிலப் பகுதிக்குச் செல்லும் வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் பெரும்போக நெல்லினை அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறிப்பாக 800 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்ட 5000 வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாத நிலையில் வீதியோரங்களிலும் வயல்வெளிகளிலும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இவ்வாறு எடுத்துச்செல்ல முடியாத நிலையில் 15 நாட்கள் வரையில் அங்கு நெல் மூடைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல் மூடைகள் மூழ்கிப் பாதிப்படைந்துள்ளன.

இதனால் அக்கரைவெளியில் தற்போது 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனை விட இன்னும் அறுவடை செய்யவேண்டிய நிலையில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் அக்கரைவெளியில் காணப்படுகின்றபோதும் குறித்த வீதிப் பாதிப்பால் விவசாயிகள் அறுவடை செய்வதிலும் தயக்கங்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் முறையீட்டுக்கு அமைய துரைராசா ரவிகரன் கொக்கிளாய் புளியமுனைப் பகுதியிலிருந்து, கொக்கிளாய் களப்பினூடாக படகில் குறித்த அக்கரைவெளிப் பகுதிக்கு நேரடியாகச் சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் தொடர்பில் பார்வையிட்டார்.

இதன்போது விவசாயிகளால் உடைப்பெடுத்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் காண்பிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாத நிலையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்மூடைகளையும் ரவிகரனிடம் விவசாயிகள் காண்பித்தனர்.

அதேவேளை குறித்த விளாத்தியடி இறக்கப்பாலத்தினைத் தற்காலிகமாகச் சீர்செய்து தாம் தற்போது அறுவடை செய்யும் நெல்லை எடுத்துச்செல்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு நீண்ட நாட்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதாலும், அடுக்கிவைக்கப்பட்ட நெல்மூடைகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததாலும் சந்தைப்படுத்த முடியாத நிலையில் காணப்படும் தமது நெல்லுக்கு இழப்பீடுகளைப் பெற்றுத்தருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது விவசாயிகளால் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு உடனடியாக தொலைபேசி அழைப்பெடுத்த  ரவிகரன், விவசாயிகளின் பாதிப்பு நிலை தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலைமைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதுதவிர விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலைகள் தொடர்பில் உரிய தரப்பினர்களது கவனத்திற்கு கொண்டுவருவதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு நிலையை தீர்க்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைய கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணியிலிருந்து அக்கரைவெளி வரைக்குமான பாதையைச் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் அந்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.