அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கைகள் காவல் துறைக்கு இதுவரை கிடைக்கவில்லை

வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கைகள் பொலிஸாருக்கு இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

சபுகஸ்கந்த பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பயணித்த ஜீப் வாகனம் வீதியில் பயணித்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் இரண்டு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரின் உடல் நிலையை கருத்தில்கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கைகள் பொலிஸாருக்கு இதுவரை கிடைக்கவில்லை.  வைத்திய அறிக்கைகள்  கிடைத்த பின்னர் தான் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.