இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘MSMEs 2025 விருது வழங்கல் விழா” மார்ச் மாதம் 03ஆம் திகதி பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, அச்சுத்துறை கடந்து வந்த கடினமான பாதையையும் அதன் தற்போதைய நவீன வளர்ச்சியையும் பாராட்டி உரையாற்றினார்.
தனது உரையின் ஆரம்பத்தில் அச்சுத்துறையுடனான தனது நீண்டகால தொடர்பை நினைவுகூர்ந்த அமைச்சர், ஆரம்ப காலங்களில் ஒரு பத்திரிகையை வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அபரிமிதமான உழைப்பை விவரித்தார்.
தாம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலத்தில் பத்திரிகையொன்றை வெளியிட்டபோது அதற்கு கொழும்பு கோட்டை வரை அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரிப்பதும், பத்திரிகையை அச்சிடுவதற்கான கடதாசிகளைப் பெறுவதும் அவற்றை அச்சிடுவதற்கு கிராண்ட்பாஸ் பகுதியில் ஒரு அச்சகத்தை தேடுவது என்பது அக்காலத்தில் பெரும் சவாலாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
தட்டச்சு இயந்திரங்கள் மற்றும் கணினிகள் இல்லாத காலத்தில், ஒரு சிறிய எழுத்துப்பிழை ஏற்பட்டாலும் முழுப் பக்கத்தையும் மீண்டும் எழுத வேண்டிய கட்டாயம் இருந்ததையும், நேரம் பாராது கண்விழித்து பணியாற்றிய அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இரவு 09 மணிக்கு எழுதி முடிக்கப்படும் செய்திகள், அதிகாலை 04 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் அளவிற்கு அன்றைய காலப்பகுதியிலும் அச்சுத்துறை ஒரு நேர்த்தியான விநியோக வலையமைப்பைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அச்சுத்துறையின் மூலப்பொருளான கடதாசி உற்பத்தியில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் பங்களிப்பு குறித்துப் பேசிய அவர், கொழும்பிலிருந்து வாழைச்சேனைக்கான ரயில் போக்குவரத்து ஊடாகப் பத்திரிகைகள் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்தார். தற்போதைய காலகட்டத்தில் அச்சுத்துறை அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சியை அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.
அன்று ஒரு எழுத்துப்பிழையை சரிசெய்ய ஒரு முழுப் பக்கத்தையே மாற்ற வேண்டியிருந்தது. ஆனால் இன்று டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வருகையினால் அச்சுத்துறை மிகவும் இலகுவாகவும், விரைவாகவும் மாற்றமடைந்துள்ளது.
நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அச்சுத்துறையினர் தங்களை மாற்றிக்கொண்டுள்ள விதம் பாராட்டுக்குரியது என்றும், டிஜிட்டல் யுகத்தில் அச்சுத் தொழில் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள இத்தகைய நவீனத்துவமே கைகொடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், அச்சுத் துறையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி சர்வதேச தரத்திற்குத் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் பங்களிப்பு இன்றியமையாதது எனத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கினை வகிக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள், நாட்டின் பொருளாதாரத்தின் உண்மையான முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். அவர்களின் சவால்களைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அச்சகத்தொழில் மற்றும் பொதியிடல் துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டிலேயே தரமான பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வர்த்தகர்கள் எதிர்நோக்கிய வரிகள் மற்றும் வங்கிக் கடன் நெருக்கடிகளுக்குத் தீர்வாக, புதிய வரித் திருத்தங்கள் மற்றும் இலகுவான கடன் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, தகுதியான மற்றும் திறமையான சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதன்போது தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது சிறந்த அச்சகத் வர்த்தகர்களுக்கு பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



