சுகாதார அமைச்சின் அச்சுறுத்தல்கள் காரணமாகவே, தகுதியுள்ள புதிய வைத்தியர்கள் தமது மேலதிக பயிற்சிகளுக்குப் பின்னரான நியமனங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகந்ததாச, புதிய வைத்தியர்கள் தற்போது கடும் அச்சத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள வைத்தியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதை நாம் அவதானித்தோம். அவர்கள் அரச சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும், அவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி, அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையற்ற தன்மையால் அவர்கள் மிகவும் அசாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தொழில்முறைச் சிக்கல்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே வைத்தியர்கள் விரும்புவதாகவும், ஆனால் சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து வருகிறார். பாதாள உலகக் கும்பல்களைப் போன்ற மிரட்டல் பாணியில் பிரச்சினைகளைத் தீர்ப்பதை வைத்தியர்கள் விரும்பவில்லை. அந்தப் பயத்தின் காரணமாகவே அவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
சட்டவிரோதமான இடமாற்றங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இன்று (05) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாகத் தமக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் கடும் அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சட்டபூர்வமான முறையிலேயே வைத்தியர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





