வுனியா வடக்கில் தற்போது அதிகரித்துள்ள சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் காணி அபகரிப்பு நெருக்கடிகள் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து அதிகளவில் தமிழ் மக்கள் வெளியேறியுள்ளதாகவும், கிராமங்களில் மக்கள் இன்மையினால் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 23பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மேலும் சில பாடசாலைகள் மூடப்படும் நிலையிலும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வவுனியா வடக்கில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்புக்களைத் தடுக்குமாறும், தமிழ்மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழும் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வவுனிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் அதிக பாடசாலைகள் மூடப்பட்ட கல்விவலயமாக வவுனியா வடக்கு கல்வி வலயம் காணப்படுகின்றது.
அந்தவகையில் வவுனியா கல்வி வலயத்தில் 23பாசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகளவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணமென்ன? அந்தக்காரணத்தினை அதிகாரிகளான நீங்கள் எம்மிடம் தெரிவித்தாலேயே எம்மாலும் அந்தப் பாரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதால் எமது மக்கள் வெளியேறுகின்றனர். அத்தோடு பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. இந்தக் காரணங்களினாலேயே வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இவ்வாறு பாடசாலைகள் அதிகளவில் மூடப்பட்டுள்ளது – என்றார்.
இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் இதன்போது பதிலளிக்கையில்,
எம்மைப் பொறுத்தவரைக்கும் வளப்பற்றாக்குறை காரணமாக எந்தப்பாடசாலைகளும் மூடப்படவில்லை. மாணவர்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா வடக்கு கல்விவலயத்தில் மூடப்பட்ட 23பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளை, ஆளுனரையும் அழைத்துச்சென்று பார்வையிட்டிருந்தோம்.
அந்தவகையில் அந்தப்பகுதிகளில் மக்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் தொகை குறைவடைவதால் மூடப்படுகின்ற நிலையிலும் இன்னும் சில பாடசாலைகள் காணப்படுகின்றன – என்றார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு என்பது மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகும். இங்கு சிங்கள குடியேற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், காணிகள் அபகரிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புக்களினால் இந்தப்பிரதேசத்திலிருந்து எமது மக்கள் வெளியேறிவருகின்ற மிகமோசமான பாதிப்பு நிலை காணப்படுகின்றது.
இந்தவிடயத்தில் ஆளுநரும், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கவனஞ்செலுத்தவேண்டும். வவனியா வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஒரு மாதகாலத்திற்குள் ஆராயப்படுமென பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். அதனை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
வவுனியா வடக்கில் சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்பு நெருக்கடிகளைத் தடுத்து எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களிலிருந்து வெளியேறாமல் வாழ்வதற்குரிய வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இதனைவிட வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிக அதிகளவில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. அதனை வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மறுக்கமுடியாது. எனவே வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு வடமாகாணகல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





