மாத்தளை – நாளந்தாவில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றில், அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரிசம்பா அரிசியை விற்பனை செய்தல் மற்றும் “லங்கா பாஸ்மதி” என்ற தவறான பெயரில் பணம் செலுத்தும் சீட்டுகளை வழங்கி நுகர்வோரை தவறாக வழிநடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக நௌல நீதவான் நீதிமன்றத்தால் 110,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று செவ்வாய்க்கிழமை (16) விதிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரிசம்பா அரிசியை விற்பனை செய்ததாகவும், பணம் செலுத்தும் சீட்டுகளை வழங்கி நுகர்வோரை தவறாக வழிநடத்தியதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக 110,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும்போது விழிப்புடன் இருக்கவும், தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்க பணம் செலுத்தும் சீட்டுகளை பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்பு மற்றும் விலைகளை கவனமாக சரிபார்க்கவும் அதிகாரிகள் நுகர்வோரை வலியுறுத்தியுள்ளனர்.





