தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னதெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான பஸ் இயக்கத்தினால் முறையான அனுமதிப் பத்திரங்களை பெற்று சட்டப்பூர்வமாகச் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுவதுடன், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இதுவொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
மேலும், பெருந்தொகை முதலீடுகளைக் கொண்ட தனியார் பஸ் நிறுவனங்கள் ஒரே அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி பல சேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றன. இவ்வாறான ஒரு செயற்பாட்டை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது குறித்து முறையான அவதானம் செலுத்தாமல் வருகிறது. இது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ.சந்தரபாலாவிடம் நாம் வினவியது போது, அனுமதிப்பத்திரம் இன்றி தூரச்சேவைகளில் கணிசமான எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருவது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், அவற்றின் எண்ணிக்கை துல்லியமாக 1000 தானா என்பதை உறுதியாக கூற முடியாது எனவும், தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி ஒரு பயணத் தடங்களுக்கு மட்டும் அனுமதியை பெற்றுவிட்டு மேலதிக தடங்களில் ஓடும் பஸ்களும் இதில் அடங்குகின்றன என்றும் விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும், அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக ஓடும் பஸ்கள் மற்றும் முறையான அனுமதி இருந்தும் விதிமுறைகளை மீறும் பஸ்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிய முறையான வேலைத்திட்டம் ஒன்றை ஆணைக்குழு தற்போது தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.





