அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தில் தேவையற்ற விதிமுறைகளை உள்ளடக்கியதேன்?

கடந்த மாதம் நவம்பர் 28 ஆம் திகதி  வெளியிடப்பட்ட அவசர காலசட்டத்தில்  உள்ளடங்கும் ஏற்பாடுகள் தற்போதைய இடர் நிலைமைக்கு பொருத்தமில்லாத விதிமுறைகள் காணப்படுகின்றன. கடந்த காலத்தைப்போன்று அந்த ஏற்பாடுகளை உள்ளீர்த்து சட்டத்தை அமுலாக்கியமைக்கான காரணம் என்ன என்று  சட்டத்தரணி சாலிய பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் நிலவிய பேரிடர் சூழலில், ஆட்சியமைப்பு, மனித உரிமைகள் மற்றும் நிறுவக சவால்கள்  போன்றவற்றை வழிநடத்துவது தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்  ஏற்பாடு செய்த  கலந்துரையாடலொன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் சட்டத்தரணி பவானி பொன்சேகா,முன்னாள் சிவில்சேவை அதிகாரி ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் பொருளியல் ஆய்வாளர் யொலானி பெர்னாண்டோ   உள்ளிட்டோர் குழு உறுப்பினர்களாக கலந்து கொண்டனர். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை உலுக்கியுள்ள தித்வா புயலை அடுத்து நிவாரணம், உடனடி செயற்பாடு, மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு ஆகிய அனைத்தும் உடனடியாக கவனம் பெற வேண்டிய முன்னுரிமை பிரச்சினைகளாகும்.

பேரிடர் சூழ்நிலைகளான வெள்ளம், நிலச்சரிவு, புயல் உள்ளிட்ட இயற்கை அபாயங்களை நிர்வகிக்க  2025 நவம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நாடு முழுவதும் பொது அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த அனர்த்தத்தின் விசேடமான சூழ்நிலையில் அவசரகால நிலை அறிவிப்பு அவசியமானது எனக்கருதினாலும், வெளியிடப் பட்டுள்ள குறிப்பிட்ட அவசரகால சட்டம் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

முன்னைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட பரந்த விரிவுடைய ஏற்பாடுகள் காணப்பட்ட உள்ளடக்கத்தின் சாரத்தை மீண்டும் பிரதிபலிப்பதோடு , பேரிடர் முகாமைத்துவம், நிவாரணம் அல்லது மீள்கட்டமைப்பு  ஆகியவற்றுடன் தொடர்பில்லாத  பரந்த அதிகாரங்களையும் வழங்குகின்றன.

இந்த சட்டத்தின் பெரும்பாலான விதிமுறைகள் குற்றவியல் செயல்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக இருப்பதானது, அவை இப்பேரிடர் சூழ்நிலைக்கு பொருத்தமா என்பதையும் அதன் தேவையையும் பற்றிய கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.

அமுலாக்கப்பட்டுள்ள சட்டத்தின்  சில குற்றப்பிரிவுகள் முந்தைய அவசரகாலநிலை சட்டங்களில் இருந்தவை போன்று அளவுக்கு மீறிய மற்றும் நியாயமற்ற  பிரிவுகளுடன் ஒத்துப்போகின்றது. இது தற்போதைய சூழலை பொருட்படுத்தாமல், முந்தைய விதி முறைகளின் சில பகுதிகள் நேரடியாக பிரதியெடுக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அவசரகால நிலை முற்றிலும் பேரிடர் முகாமைத்துவத்திற்காக மட்டுமே  பயன்படுத்தப்படும் என்றும்,  வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.