அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி முயற்சிக்கிறார்

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அது குறித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை மக்களை ஏமாற்றும் வெறும் கண்துடைப்பு மாத்திரமே அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள தாக்குதல்களால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. இது இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளி வருகின்றது.

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் உள்நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இவ்வாறான ஆக்கபூர்வமான திட்டங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

அத்துடன் யூரியா உரம் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் தவறானவை. உர நிறுவனங்களிடம் இருந்த உரத் தொகையை முழுமையாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க இணக்கம் காணப்பட்ட போதிலும் ஜனாதிபதி தலையிட்டு அந்த நிறுவனங்களுக்கு சார்பாக முடிவுகளை மாற்றியுள்ளார். இதனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக மின் உற்பத்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிலக்கரியைச் சாப்பிட்டுப் பார்த்து தரம் அறிய முடியாது என ஜனாதிபதி கூறியுள்ள போதிலும் இறக்குமதி செய்யும் போது உரிய ஆய்வுக்கூட அறிக்கைகளை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே எமது கேள்வியாகும்.

தரமற்ற நிலக்கரியை விநியோகித்த நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டை அறவிட முடியாத வகையில் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மின்சாரக் கட்டணம் தொடர்பிலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகின்றது. சாதாரண மக்களின் சூரிய சக்திக் கட்டமைப்புகளை முடக்கிவிட்டு பெரும் நிறுவனங்களுக்கு காடுகளையும் யானைகள் பாதுகாப்பு வலயங்களையும் அழித்து சூரியப் பலகைகளை அமைக்க அரசாங்கம் அனுமதி வழங்கி வருகின்றது.

அரசாங்கம் பாரிய பொருளாதார இழப்புகளை மக்கள் மீது சுமத்தி வருகின்றது. இவ்வாறான ஏமாற்று வேலைகள் மூலம் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்றார்.

சமீபத்திய செய்திகள்