தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பதவியில் நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் விவாதத்திற்கு வரவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் இந்தத் தீர்மானத்தை முன்னிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையே கடந்த வாரம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
விவாதத்தின் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இதன்போது இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்துள்ள கடும் எதிர்ப்பு காரணமாக, நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாகவே அவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் உட்புறத்திலிருந்தே ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் ஜனாதிபதி அவரைப் பதவியிலிருந்து நீக்கத் தயக்கம் காட்டிய போதிலும், கட்சிக்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் ஏற்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாக, குமார ஜயகொடிக்கு எதிராக நடவடிக்கை ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்தாலும் அல்லது நீக்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளன.
மறுபுறம் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்திற்கு இணையாக, அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்விகளை அம்பலப்படுத்தும் வகையில் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராளுமன்ற வளாகத்திலும் வெளியிலும் முன்னெடுக்கச் சஜித் பிரேமதாச தலைமையிலான அணி ஏற்கனவே திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





