இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ‘அரகலய’ என்பது ஒரு முழுமையான புரட்சியல்ல. அது ஒரு மக்கள் எழுச்சியாகவே வரைவிலக்கணப்படுத்தப்பட வேண்டும். இப்போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கியது மாத்திரமே அதன் உச்சகட்டம் அல்ல என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகமொன்றுக்கு நேற்று புதன்கிழமை (13) வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
போராட்டம் என்ற சொல்லுக்குள் உலக அளவில் பல்வேறு வரைவிலக்கணங்கள் உள்ளன. சூழ்ச்சிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது இராணுவ சதித்திட்டங்கள் கூட ஒரு வகை போராட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன.
ஆனால், இலங்கையில் நாம் முன்னெடுத்தது உலகளாவிய போராட்ட இலக்கணங்களுக்கு உட்பட்ட, தெளிவான இலக்குகளையும் வேலைத்திட்டங்களையும் கொண்ட ஒரு மக்கள் போராட்டமாகும்.
ஆரம்பத்தில் ஏப்ரல் 9 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு மக்கள் திரண்ட போது, அங்கு ஒருமித்த வேலைத்திட்டம் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்துக்கு ஏற்ப கோஷங்களை எழுப்பினர். சிலரது பதாகைகளில் முறையற்ற வார்த்தைகள் கூட இடம்பெற்றிருந்தன.
ஆனால், ஒரு சில வாரங்களில் கலந்துரையாடல்கள் மூலம் அவற்றை ஒரு முறையான அரசியல் போராட்டமாக மாற்ற எம்மால் முடிந்தது. குறிப்பாக, ‘காக்கா காக்கா’ என்ற கோஷம் பசில் ராஜபக்ஷவை நோக்கிய ஒரு குறியீடாக அமைந்தது. அவர் ஒரு தோல்வியடைந்த நிதியமைச்சர் என்பதையும், அவரது பொருளாதாரக் கொள்கையே நாட்டை அழித்தது என்பதையும் மக்கள் மயப்படுத்தினோம்.
இன்று பலர் கேட்கிறார்கள், போராட்டத்தின் மூலம் எதிர்பார்த்த மாற்றம் ஏன் நடக்கவில்லை என்று? உண்மையில் இது ஒரு புரட்சியாக இருந்திருந்தால், அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு குறிப்பிட்ட வர்க்கம் போராட்டத்தின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றியிருக்கும்.
ஆனால், இது ஒரு மக்கள் எழுச்சி மாத்திரமே. கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதுடன் எல்லாம் முடிந்துவிடும் என்று நாம் நினைக்கவில்லை. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமன்றி, 1970 களில் இருந்து திறந்த பொருளாதாரக் கொள்கையை தவறாகக் கையாண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே பொறுப்புக் கூற வேண்டும்.
எமது உண்மையான வேலைத்திட்டம் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் முடிவடையவில்லை. அதன் பின்னர் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகியிருக்க வேண்டும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைத்திருக்க வேண்டும்.
அதற்கு இணையாக, போராட்டக்காரர்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் சபை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றம், வரி திருத்தங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் விவசாயிகளின் கடன் சுமைகளை குறைத்தல் போன்ற அடிப்படை மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும்.
இந்த இடைக்கால நிர்வாகத்தின் கீழ் ஒரு வருட காலத்துக்குள் தேர்தலுக்குச் சென்று, மக்கள் தமக்கான புதிய ஆட்சியாளர்களைத் தீர்மானிக்க இடமளிப்பதே எமது திட்டமாக இருந்தது. ஆனால், அந்தத் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் முறையாகச் செயற்படுத்தப்படவில்லை.
அதற்குள் பல அரசியல் சூழ்ச்சிகளும் அதிகாரப் போட்டிகளும் புகுந்துவிட்டன. இதனாலேயே இதை நாம் ஒரு சார்பு ரீதியான வெற்றி என்று அழைக்கிறோம். சில அரசியல் கட்சிகள் இது ஒரு வெளிநாட்டுச் சதி என்றும், ஒரு சிறந்த தலைவரை வீழ்த்திய வினை என்றும் கூறுகின்றன. ஆனால், அந்த நேரத்தில் மக்கள் போராட்டம் என்பது சமூக மாற்றத்துக்கான ஒரு அத்தியாவசியத் தேவையாக இருந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட வெற்றியை எம்மால் ஈட்ட முடிந்தது என்றார்.





