இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம் கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகனும் உடனிருந்தார்.
இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு மரணமும் சம்பவித்தது. அங்கே தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். அதேபோல வெலிக்கடை சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த சிறைச்சாலைகளில் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகத்தான் உள்ளது. கடந்த காலங்களில் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் இடம்பெற்ற சம்பவங்களை நினைக்கும்போது அச்சம் கொள்ள தோன்றுகிறது. பெற்றோரும் அங்கு உள்ள கைதிகளும் அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதிகள் வழங்தப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.
இந்த விடயத்தை எம்மிடம் நினைவுபடுத்திய அரசியல் கைதிகள், இது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், தமது விடுதலையை உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.
எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளை தமிழ் மக்களது வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்காமல் அவர்களது விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தை கையாள்வதள்காக ஒரு குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கைகள் ஏற்கனவே நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்குரிய நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.
அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவதற்கு, அந்த குழு முன்வைத்த விடயங்களை விரைந்து நடைமுறைப்படுத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த குழுவின் அறிக்கைக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதேவேளை ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை சிறைச்சாலை கட்டளை சட்டத்தின் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தியோ, அவர்களது நன்னடத்தை அடிப்படையிலேயோ விடுதலை செய்து, அவர்களும் அவர்களது உறவுகளுடன் சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்.
அவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றார்கள். நாங்களும் சிறையில் வாடியவர்கள் என்ற ரீதியில் எமக்கு அதன் வேதனை தெரியும். எனவே அரசாங்கம் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




