அரச உத்தியோகத்தர்கள் மீதுள்ள அக்கறை பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீதில்லையா ?

அரச உத்தியோகத்தர்களுக்கு 2029ஆம் ஆண்டு வரை சம்பள அதிகரிப்பிற்கான திட்டமிடலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் அந்தளவுக்கு அக்கறை காண்பிக்காமை கவலைக்குரியது. அதேவேளை நீதிமன்ற உத்தரவுக்கு கூட மதிப்பளிக்காமல் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள நிர்ணயசபையை புறக்கணித்துள்ளமையை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

விசேட சம்பள நிர்ணய சபையைக் கூட்டுமாறு சபையின் இரு அங்கத்தவர்களால் விடுக்கப்பட்ட எழுத்து மூல கோரிக்கைக்கமைய நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு – நாரஹேன்பிட்டவிலுள்ள தொழில் திணைக்களத்தில் சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்டது. சபைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே தொழிற்சங்கங்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து, பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள் பங்கேற்காத காரணத்தால் இன்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. எனினும் விரைவில் மீண்டும் சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தொழில் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இன்று எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பெருந்தோட்ட கம்பனிகளின் இந்த ஊதாசீனப் போக்கிற்கு தொழில் ஆணையாளரால் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 1350 ரூபா அடிப்படை சம்மபளம் வழங்கப்படுகிறது. தற்போதைய வாழ்க்கை செலவுக்கமைய நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அப்பால் மேலதிக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

விவசாய தோட்ட தொழிலாளர் காங்ரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி தெரிவிக்கையில், ஓராண்டின் பின்னர் சம்பள நிர்ணயசபை கூட்டப்பட்ட போதிலும், கம்பனிகள் பங்கேற்காமையால் எந்தவொரு யோசனையையும் முன்வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அரச உத்தியோகத்தர்களுக்கு 2029ஆம் ஆண்டு வரை சம்பள அதிகரிப்புக்கான நிலையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களின் சம்பள விவகாரத்தில் இவ்வாறு திட்டமிட்டு வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் ஜனாதிபதி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விவகாரத்தில் அந்தளவுக்கு அக்கறையின்றி இருக்கின்றாரா?

சம்பளம் மாத்திரமின்றி தொழிலாளர்களுக்கான நலன்புரி நன்மைகள் தொடர்பிலும் கம்பனிகள் உள்ளிட்ட எவருக்கும் அக்கறையில்லை. பல இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற போதிலும், அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமை கவலைக்குரியதாகும். இந்த அரசாங்கமாவது இந்த விவகாரத்தில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

இலங்கை செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி கருத்து வெளியிடுகையில், நீதிமன்றத்ததால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் தொகையை அறிவிப்பதற்கான காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து தொழில் ஆணையாளர் சம்பள நிர்ணய சபையைக் கூட்டியமைக்கு நன்றி கூறுகின்றோம். அவ்வாறிருந்தும் வழமையைப் போன்று முதலாளிமார் சம்மேளனம் சபைக்கு சமூகமளிக்கவில்லை. எனினும் செங்கொடி சங்கத்தின் சார்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம்.

தேயிலை ஏற்றுமதியூடாக கம்பனிகள் எவ்வாறு இலாபமீட்டுகின்றன என்பது எமக்குத் தெரியும். இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் 9 சதவீத பங்களிப்பினை தேயிலை தொழிற்துறை வழங்குகிறது. ஆனால் பெருந்தோட்ட கம்பனிகள் தாம் நஷ’டத்தில் இயங்குவதாகவே குறிப்பிடுகின்றன. இம்முறையும் இந்த காரணத்தைக் கூறி தப்பிப்பதற்கு நாம் அவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பிரதிநிதி சி.முத்துக்குமார் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாசாயக்க அண்மையில் பதுளையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் கம்பனிகள் அதற்கு மதிப்பளிக்காமல் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. சட்ட ரீதியான அழைப்புக்களை கம்பனிகள் இவ்வாறு புறக்கணித்தால் தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும்? சிறந்த தீர்வொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாம் இங்கு வருகை தந்த போதிலும், பேச்சுவார்த்தைகளைக் கூட முன்னெடுக்க முடியாத நிலைமை கவலைக்குரியதாகும். நாட்டின் சட்டத்துக்கு மதிப்பளிக்காமல் கம்பனிகள் செயற்படுவதால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த சிறிமல்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு இம்முறையும் கனவாகியுள்ளது. தொழிலாளர்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டுள்ளனர். கம்பனிகள் வருகை தராமையால் எம்மால் எந்தவொரு யோசனையையும் முன்வைக்க முடியாமல் போனது எனத் தெரிவித்தார்.