அதிபர் சேவை உள்ளிட்ட அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த வருடத்திற்குள் புதிய ‘சம்பளக் குழு’ ஒன்று நிறுவப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் ஊடாக அரச சேவையில் நீண்டகாலமாக நிலவும் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அதிபர் சங்கங்களுடனும், அதிபர்களுடனும் நாம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.
அரசாங்கத்தின் கொள்கையின்படி, இந்த வருடம் ஒரு சம்பளக் குழுவை நியமிக்கவுள்ளோம். அதன் மூலமே நிலையானதொரு தீர்வை எட்ட முடியும். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு முறையினால் கல்வித் துறையில் மாத்திரமன்றி, அரச சேவையின் பல துறைகளிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.
எனவே, ஒட்டுமொத்த அரச சேவைக்கும் ஒரு நிலையான தீர்வை வழங்க இந்தச் சம்பளக் குழு ஊடாக முயற்சிக்கிறோம். குறிப்பாக அதிபர்களின் பிரச்சினைகள் குறித்து இந்த ஆணைக்குழுவிடம் விசேட பரிந்துரைகளை முன்வைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


