பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சையளிப்பதுக்காக 114 மில்லியன் ரூபா செலவில் 18 அதிநவீன ‘கொல்போஸ்கோப்பி’ இயந்திரங்களை வைத்தியசாலைக் கட்டமைப்பில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் உள்ள மொத்த இயந்திரங்களின் எண்ணிக்கை 15 இலிருந்து 33 ஆக உயர்வடையும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
60 இலட்சம் ரூபா பெறுமதியான 12 இயந்திரங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கண்டி, கம்பஹா உள்ளிட்ட வைத்தியசாலைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
மேலும் 42 மில்லியன் ரூபா செலவில் எஞ்சிய 6 இயந்திரங்கள் எதிர்வருமு வரும் ஜூன் மாதத்திற்குள் வவுனியா, அம்பாறை, ராகம, களுத்துறை போன்ற போதனா மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிறுவப்படவுள்ளன. அத்துடன், பயன்பாட்டிலுள்ள பழைய இயந்திரங்களில் 5 அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.
கர்ப்பப்பை வாய் மற்றும் யோனிப் பகுதியிலுள்ள அசாதாரண செல்கள் அல்லது புண்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய இந்த அதிநவீன உபகரணம் மகப்பேற்று விசேட மருத்துவர்களுக்கு உதவுகிறது.
ஹியுமன் பாப்பிலோமா வைரஸ் மூலம் பரவும் இப்புற்றுநோயால் நாட்டில் ஆண்டுதோறும் 1,200 பேர் பாதிக்கப்படுவதுடன், முறையான சிகிச்சையின்மையால் 180 பேர் வரை உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன.




