அவசரகாலநிலைப் பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள் -மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கரிசனை

தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் அதனை சீரமைப்பதற்கு அரச அதிகாரிகள் முன்னெடுத்துவரும் பிரயத்தனங்கள் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலநிலைப் பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை பேரனர்த்தத்தினால் மிகமோசமான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அண்மையில் பிரதியமைச்சர் சுனில் வட்டகலவினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி பிரதியமைச்சரின் கருத்து அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்துவதில் உள்ள ஆபத்தான தன்மையைக் காண்பிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘மக்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் தோற்றுவிக்கும் நோக்குடன் பகிரப்படும் போலிச்செய்திகள் தொடர்பில் நடவடிக்கை அவசியம். இருப்பினும் குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலையின்போது இவ்வாறான விடயங்களை நிதானமான முறையில் கையாளவேண்டும். மாறாக  சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கைதுசெய்து, விளக்கமறியலில் வைப்பது என்பது பிரச்சினைகளை மேலும் தீவிரப்படும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேவேளை தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் அதனை சீரமைப்பதற்கு அரச அதிகாரிகள் முன்னெடுத்துவரும் பிரயத்தனங்கள் தொடர்பில் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண, இப்போது அவசரகாலநிலை பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள் உள்வாங்கப்பட்டுள்ளமையானது மனித உரிமைகள் சார்ந்து தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச நெருக்கடிக் கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், புதிய அரசியல் கலாசாரத்தைக் கொண்டுவருவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிய விடயம் இப்போது தலைகீழாகியிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார்.