ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சூட்சுமமாகப் புகுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யெவெல பஞ்ஞாசேகர தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது,

ஒரு ஒழுக்கமான நாட்டில் நிலவ வேண்டிய நற்பண்புகள் மற்றும் கல்வி முறைமை குறித்தே நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் பாலினக் கல்வி என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களால் பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தற்போது ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடக் கையேட்டை வெளியிட்டு, அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

அத்துடன் மேலதிகக் கற்றலுக்காக ‘சமதியாவ’ எனும் இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு ஒரு வழிகாட்டி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் ஊடாகச் சிறுவர்களுக்கு ஓரினச்சேர்க்கை கல்வி தொடர்பான கருத்துக்களே திணிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பாரிய பொருளாதார இலாபங்கள் இருக்கலாம் எனவும், சிறுவர்களை இவ்வாறான விடயங்களில் ஆர்வம் கொள்ளச் செய்யும் ஒரு நுட்பமான தந்திரமே இது எனவும் நாம் கருதுகின்றோம்.

இது எமது நாட்டின் பண்பாட்டுக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணான செயலாகும். ஆகவே, குறித்த பாடக் கையேட்டை உடனடியாக மீளப்பெற வேண்டும். முறையான தெளிவுபடுத்தல்கள் இன்றி மாணவர்களை இவ்வாறான தளங்களுக்கு வழிநடத்தியவர்கள் யாரென உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ‘நாங்கள் இதனை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டோம்’ என்று கூறிவிட்டுப் பொறுப்பில் இருந்து எவரும் நழுவிவிட முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.