இடமாற்றம் பெற்ற விசேட வைத்தியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் போது எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் நடைமுறை ரீதியான கடினத்தன்மைகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் விளக்கமளிக்கப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொண்டார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான இடமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ், வைத்தியர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் போது எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இதன்போது விசேட வைத்தியர்கள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.
இந்தப் பிரச்சினைகளை முறையாகத் தீர்ப்பதற்கு சுகாதார மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.
தற்போதுள்ள நடைமுறைகளை மீளாய்வு செய்து, மிகவும் நடைமுறைச் சாத்தியமான மற்றும் வினைத்திறனான வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினுடன் இணைந்து நெருக்கமாக செயற்படுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அரசு வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அண்மையில் ஒரு விசேட வேலைத்திட்டத்தைத் தொடங்கியிருந்தது.
இடமாற்றங்கள் மற்றும் ஏனைய நிர்வாக காரணங்களால் வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தடைகளைக் குறைப்பதே அந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தக் கலந்துரையாடலில் விசேட வைத்தியர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் விசேட வைத்தியர் ரசிக குணபால, செயலாளர் விசேட வைத்தியர் ஆர். ஞானசேகரம், ஆசிரியர் விசேட வைத்தியர் சுனில் ஆர். விஜேசிங்க, தேசிய அமைப்பாளர் விசேட வைத்தியர் பி.டபிள்யூ.சி.எல். சந்தகேன் வடுகே மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களான விசேட வைத்தியர் எஸ்.ஐ. மஜித, விசேட வைத்தியர் ஏ. ரணவீர, விசேட வைத்தியர் கே.எல். ஷிரோமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










