இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு  பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு புதன்கிழமை (31) வெளியிட்ட விசேட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

தற்போது  டெலிகிராம், வாட்சப் மற்றும்  முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள்  தொடர்பில் தொடர்ச்சியாக  பல முறைப்பாடுகள் பதிவாகுவதைக் காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, இணையவழி வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொள்ளுதல், உடனடி கடன்களை வழங்குவதாகக் கூறி ‘சேவைக் கட்டணம்’ வசூலித்தல் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பரிசுகள் வந்துள்ளதாகக் கூறி சுங்கக் கட்டணம் கோருதல் போன்ற நுணுக்கமான முறைகளில் இந்த மோசடிகள் இடம்பெறுகின்றன.

மேலும், போலியான முதலீட்டுத் திட்டங்கள், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் காதல் தொடர்புகளின் ஊடாக பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்தும்  பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். மக்கள் தமது வங்கி கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள், பயனர் பெயர்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP) போன்ற இரகசியத் தகவல்களை எக்காரணம் கொண்டும் முன்பின் தெரியாத  மூன்றாம் நபர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை  அழுத்துவதையோ அல்லது QR குறியீடுகளைப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு ம் வலியுறுத்துகிறோம். இவ்வாறான இணையவழி நிதி மோசடிகளுக்கு எவரேனும் முகம் கொடுத்தால், அது குறித்து உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  கணினி  குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யுமாறு  கோரிக்கை விடுக்கிறோம்.