இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் தி.வேல்நம்பி !

இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்கள்.உயர்பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிப தியாக விளங்கிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி திருநாவுக்கரசு வேல்நம்பி (B.Com, M.A. யாழ்ப்பாணம் M., Ph.D சென்னை) அவர்கள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்12 ஆவது துணைவேந்தராகப் பதவி ஏற்றார்.

பேராசிரியர் வேல்நம்பி அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் B.Com பட்டப்படிப்பை கற்று முடித்து பின் வர்த்தகத்துறையில் உதவி விரிவுரையாளராக இணைந்து பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்று சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியராக விளங்குகிறார். அவர் தனது சேவைக்காலத்தில் வணிகத்துறைத் தலைவராகவும், மூன்று முறை முகாமைத்துவ – வணிக பீடாதிபதியாகவும், முகாமைத்துவ முதுமாணி இணைப்பாளராகவும், பேரவை உறுப்பினராகவும், பட்டப்பின் படிப்புப் பீடப் பீடாதிபதியாகவும் கல்வி நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தார். கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் வெளியீடுகளிலும் கல்வி நிர்வாகத்திலும் மாணவர் நலச் சேவைகளிலும் நீண்ட காலம் நற்பணி புரிந்துள்ளார்.

அவர் முகாமைத்துவ வணிக பீடத்தை ஐந்து துறைகள் கொண்ட பீடமாக வளர்த்தெடுத்ததுடன் சுற்றுலாக் கற்கைநெறியையும் வளர்த்தெடுத்தார். பெரும் எண்ணிக்கையான விரிவுரையாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும், பீடத்திற்கான புதிய கட்டடத் தொகுதியைத் திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைத்ததும், சர்வதேச முகாமைத்துவ-வணிக மாநாடுகளை நடாத்தியதும் பெருமைக்குரிய விடயங்களாகும். மேலும் பட்டப்படிப்புப் பாடவிதானங்களை மேம்படுத்தியதும் முகாமைத்துவ M.A கற்கை நெறிகளை முன்னோடியாக நடாத்தியதும், பீட விரிவுரையாளர்களின் மேற்படிப்புக் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் அவர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கியதும் குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் வேல்நம்பி அவர்கள் தனது பதவிநிலை விடுமுறை காலத்தில் (Sabbatical leave) கிழக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு, திருகோணமலை வளாகம், வவுனியா பல்கலை க்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகக் கடமை புரிந்துள்ளார். மேலும் புதுச்சேரிப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களான மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன். கோயம்புத்தூர் பாரதியார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார். திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகம், அண்ணாமலை சென்னைப் பல்கலைக்கழகங்களுடன் நெருக்கமான கல்வித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார். அவருக்குத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவரின் துறை சார்ந்த கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த கௌரவம் உண்டு. அவர் பல ஆய்வு நூல்களையும், பாடநூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், பொதுவான கட்டுரைகளையும் அதிகளவில் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் முப்பது வருடங்களுக்கு மேல் விரிவுரையாளராகக் கடமை யாற்றிய பேராசிரியர் அவர்கள் பெரும் எண்ணிக்கையான மாணவர் அணியினரைச் சிறப்பாகக் கற்பித்தார். அவரின் மாணவர்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேராசிரியர் அவர்கள் தனது பாடசாலைக் காலத்திலேயே தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தனது பாடசாலைக் கல்வியை மல்லாவி மத்திய கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரிகளில் கற்றறிந்தார்.

பேராசிரியர் அவர்கள் தமிழில் சிறந்த புலமை உடையவர். வணிகப் பட்டதாரியாக விளங்கியபோதும் தமிழாய்வில் ஈடுபட்டு முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். அவர் சிறந்த பேச்சாளர், பட்டிமன்றங்கள், விவாத அரங்குகளில் பங்கு கொண்டு மக்களைக் கவரும் வகையில் பேச்சாற்றல் கொண்டவர். காலம், இடம், பொருள் அறிந்து பேசும் திறன் மிக்கவர். கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் தகைமை உடையவர், சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர். அவரது பாடசாலை நண்பர்களுடனும் பல்கலைக்கழக சகபாடிகளுடனும் சமூகத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவராக விளங்குகின்றார்.

பேராசிரியர் அவர்கள், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக உள்ளார். அகில இலங்கை அமுத சுரபி நிறுவனத்தின் அமைப்பாளர். மேலும் தமிழ் மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்படுபவர். பட்டதாரிகள். இளைஞர், யுவதிகள் தொழில் முனை வோராக இருப்பதற்கு ஊக்கமும் ஒத்துழை ப்பும் வழங்கி வருகிறார்.

இத்துறையில் பெரு முன்னேற்றம் ஏற்படாதிருப்பதையிட்டு ஆதங்கம் கொள்வார்.புதிய துணைவேந்தர் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும் பல்கலைக்கழகத் திற்கும் சமூகத்திற்கும் இடையே உறவை மேம்படுத்துவதிலும், பல்கலைக்கழகங்களின் சுயாதீனத்தைப் பேணுவதிலும். முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம். மேலும் மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையிலும் சர்வதேச நிலையிலும் கல்வியிலும். ஆராய்ச்சியிலும் அதி உன்னத இடத்தைப் பெற முயற்சி எடுப்பார் எனவும் எதிர்பார்க்கின்றோம் என்றார்  பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை.