இப்பலொகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கயான் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் நடத்திய தாக்குதலில் தம்பதியினர் இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பலொகம, அளுத்புலியங்குளம், விஜிதபுர பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹிரிபிட்டியாகம விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன் தினம் சனிக்கிழமை (25) நடைபெற்ற இப்பலொகம பிரதேச சபை புத்தாண்டு விழாவின் போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான தம்பதியினரில் பெண்ணுக்கு காதுப் பகுதியிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த ஆணுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், தலை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தம்பதியினர் முதலில் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் இப்பலொகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




