யாழ் மாவட்டம் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 893 வீடுகள் இருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், இயற்கை அனர்த்தத்தால் 1216 வீடுகள் சேதடைந்துள்ளதாகவும்,அதற்கு 304 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலாளர் மதிப்பீடு அறிக்கை வெளியிட்டுள்ளார்.போலியான எண்ணிக்கையை காண்பித்து மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்படுகிறது.அரசாங்கம் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்குவது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலாளரினால் மதிப்பீடு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க 304 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கட்டிடகூறுகள் தொடர்பான அறிக்கையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு பகுதியில் 893 வீடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை நவம்பர் மாதமளவில் எவ்வாறு 1216 ஆக உயர்வடைந்தது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை பிரதேச செயகல பிரிவில் 4379 வீடுகள் காணப்படுகின்ற நிலையில் 544 வீடுகள் சேதமடைந்துள்ளன, ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 3527 வீடுகள் காணப்படுகின்ற நிலையில் 668 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதேபோல் நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18614 வீடுகள் காணப்படுகின்ற நிலையில் 791 வீடுகள் சேதமடைந்துள்ளன. நெடுந்தீவில் இருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வரும் நிலையில் அங்கு அவ்வாறு 1216 வீடுகள் சேதடைந்திருக்க முடியும்.
போலியான எண்ணிக்கையை காண்பித்து மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. யாழ் பிரதேச செயலாளர்கள் அனுப்பும் மதிப்பீட்டு அறிக்கையை மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆராய வேண்டும். அரசாங்கமும் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.





