இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி பேண்தகு அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்தல் கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக ஆர்வங் காட்டுகின்ற பல நாடுகள் இயற்கை மூலதனப் பெறுமதியை மதிப்பீடு செய்தல் மற்றும் கணக்கிடலை மேற்கொண்டாலும், இலங்கையில் இயற்கை மூலதனப் பெறுமதி மதிப்பிடல் மற்றும் கணக்கிடல் இதுவரை சரியான வகையிலும் போதுமான அளவிலும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு உலகளாவிய சுற்றாடல் வசதிகளின் ஏழாம் உதவித்திட்டத்தின் கீழ் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சங்கம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஏனைய பங்காளர்களுடைய ஒத்துழைப்புக்களுடன் ‘இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி பேண்தகு அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்தல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதி (Global Environment Facility) இன் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
குறித்த கருத்திட்டத்தின் செயற்பாடுகள் காலி, மன்னார், புத்தளம் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அடையாளங் காணப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் 04 வருடங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக 2.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப் பெறவுள்ளது.
அதற்கமைய, உலகளாவிய சுற்றாடல் வசதியால் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதந்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சு மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




