இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தெரிவித்தார்.

உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது எனவும்  தனது இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்தில் எவ்வாறான வளங்களும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்ததாக  தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கான உலக வங்கியின் உதவிகள் பிரதான 5 துறைகளின் கீழ் அமையவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்கள் தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.