இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘கிராபின்’ பெரும் பங்களிப்பு வழங்கும்

இலங்கையின் புதிய பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு, மினிரன் (கிராஃபைட்) தொழில்துறையிலிருந்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளிவந்துள்ள ‘கிராபின்’ (Graphene) எனும் பதார்த்தத்தைப் பயன்படுத்த முடியும் என பொறியியலாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பரி (Kingsbury) ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற மினிரன் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘ராகெதர’ (Ragedara) மினிரன் சுரங்கத் தொழிற்சாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில், சுமார் 200 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

மினிரனுக்கு பெறுமதி சேர்த்தல் (Value Addition) ஊடாக இலங்கையில் முதன்முறையாக ‘கிராபின்’ உற்பத்தியை ‘ராகெதர’ மினிரன் சுரங்கத் தொழிற்சாலை ஆரம்பித்துள்ளது. தற்போது இவை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக, 01 கிராம் ‘கிராபின்’ சுமார் 50,000 ரூபா போன்ற மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கத்தின் விலையை விடவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உலகின் வளர்ந்த நாடுகள் விமானத் தயாரிப்பு, விண்கலங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் கொன்க்ரீட் உற்பத்தி போன்றவற்றுக்கு ‘கிராபின்’ பதார்த்தத்தைப் பெருமளவில் பயன்படுத்துவதாக பொறியியலாளர் கீர்த்தி விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், உயர்தரமான தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்