இலங்கையில் எல்நினோ ஆபத்து!

எதிர்வரும் 30.04.2026 முதல் சூரியனின் கதிர்வீச்சுக் கோணம் இலங்கையில் சற்று மாற்றம் பெற்றாலும் ” எல்நினோ” என்ற ஆபத்து எதிர்வரும் மே மாதம் முதல் வளர்ச்சி பெறவிருக்கின்றது. இது எதிர்வரும் மே மாதம் முதல் 2027 ஆம் ஆண்டின் டிசம்பர் வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய நாட்களில் சூரியனின் நேரான உச்சம் ( சூரியனின் கதிர்வீச்சு) காரணமாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற அதிகரித்த வெப்பநிலை ஏப்ரல் மாதத்தின் இறுதிவரை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

பொதுவாகவே இக் காலப் பகுதியில் சூரியன் இலங்கையினுடைய பல பிரதேசங்களுக்கும் கிட்டத்தட்ட 80 தொடக்கம் 90 பாகை கோணத்தில் கதிர்வீச்சினைத் தருவதன் காரணமாக இலங்கையினுடைய பல பகுதிகளிலும் அதிகளவில் வெப்பநிலை நிலவி வருகின்றது. அதிகமான வெப்பநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பிரதேசங்களிலும் வளிமண்டலத்தின் சாரீரப்பதன் அளவும் உயர்வாக காணப்படுகின்றது (80 வீதத்துக்கும் அதிகம்).

குறிப்பாக இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ஆவியாக்கத்தின் அளவும் எதிர்பார்த்ததை விட உயர்வாகவே உள்ளது. இது தொடர்ந்தால் எமது பிரதேசங்களின் தரை மேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீர் மட்டங்கள் சடுதியாக குறைவடையும். கடந்த சில நாட்களாக ஆங்காங்கே வெப்பச்சலன மழை கிடைத்தாலும் அது ஆவியாக்கத்தின் அளவை ஈடு செய்யும் வகையில் இல்லை.

கடந்த மார்ச் மாதத்தின் இறுதிக் காலத்திலிருந்து தற்போது வரை இலங்கையின் பல பகுதிகளிலும் ஆவியாக்க அளவு அதிகரித்துக் காணப்படுகின்ற அதேவேளை, பல மேற்பரப்பு நீர் நிலைகள் தங்களுடைய நீரின் அளவினை மிகவும் வேகமாக இழந்து வருகின்றன. இது ஒரு சாதாரண நிலையாகக் கருத முடியாது.

பல வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளும் எல்நினோவின் வருகையை உறுதி செய்துள்ளன. ஆனால், ஐரோப்பிய வானிலை மாதிரிகள் ஒரு படி மேலே சென்று சூப்பர் எல்நினோவின் வருகையை எதிர்வு கூறுகின்றன. எல் நினோ என்பது சமுத்திர வெப்பநிலை அளவை ( அண்மித்த நாடுகளின் வளி வெப்ப நிலையையும் கூட) 1-2 பாகை செல்சியஸ் இனை அதிகரிக்கச் செய்யும் ஒரு இயற்கைத் தோற்றப்பாடு. ஆனால், சூப்பர் எல்நினோ என்பது இந்த வெப்பநிலையை 3-5 பாகை செல்சியஸ் அதிகரிக்கச் செய்யும்.

வானிலையின் அடிப்படை வெப்பநிலையே…. வெப்பநிலையே ஏனைய வானிலை மூலக்கூறுகளைத் தீர்மானிக்கின்றது. ஐரோப்பிய மாதிரிகள் காட்டுவது போல் சூப்பர் எல்நினோ ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பினை குறிப்பாக வரட்சி மற்றும் அதனோடு இணைந்த பாதிப்புக்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

எல்நினோவின் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாண்டு இலங்கையின் தென்மேற்குப் பருவ மழையும், வடகீழ்ப் பருவ மழையும் குறைவான அளவே கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எல்நினோ நிகழ்வுகள் கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெள்ள அனர்த்தங்களையும் உருவாக்கியுள்ளன என்பதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில் நிகழும் கடுமையான ஆவியாக்கம் எமது நீர் வளங்களை கணிசமான அளவு பாதிக்கின்றன. இந்த நிலைமை எதிர்வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே, நாட்டின் பல பகுதிகளில் நீர் மட்டம் ( தரைமேல் மற்றும் தரைக் கீழ்) கணிசமான அளவு குறைந்துள்ள நிலையில் அதிகரிக்கும் ஆவியாக்கம் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கும். பல இடங்களில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.