ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சோசலிச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செயலார் வைத்தியர் வீரசிங்க விடுத்துள்ள அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட சமீபத்திய இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்பவற்றை சோசலிச மக்கள் முன்னணி (இலங்கை சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் இலங்கை மக்கள் கட்சி) வன்மையாக கண்டிக்கிறது.
இத்தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுவதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு ஒன்றின் இறையாண்மை மீதான தாக்குதலாகும். இது ஒரு உலகப் போர் வரை வியாபிக்கக்கூடிய, கட்டுப்படுத்த முடியாத மோதல் அச்சுறுத்தலையும் பிரதிபலிக்கிறது.
மத்திய கிழக்கு போர் மற்றும் அதற்கு அப்பால் உருவாகி வரும் புவிசார் அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியில், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவத் தொடர்புகள் குறித்து சோசலிச மக்கள் முன்னணி கவலை கொண்டுள்ளது.
மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நெருக்கமடைந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை சோசலிச மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. சமீபத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் வழங்கப்பட்டமை மற்றும் அமெரிக்க கட்டளை அதிகாரிகளின் கீழ் செயல்பாட்டு ஒருங்கிணைப்புக்குள் நுழைந்துள்ளமை என்பன, நாட்டின் நீண்டகால அணிசேரா வெளியுறவுக் கொள்கையை ஆபத்தான முறையில் கைவிடுவதைக் குறிக்கிறது.
இது ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சட்டவிரோதப் போரில் இலங்கையை தொடர்புபடுத்துவதற்கான பின்னணியை உருவாக்கும். பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, அமெரிக்கா தற்போது இலங்கை கடற்படைக்கும் இலங்கை விமானப்படைக்கும் நான்கு அமெரிக்க கடற்கரை பாதுகாப்பு கப்பல்களையும், 10 TH-57 சீ ரேஞ்சர் (பெல் 206) ஹெலிகாப்டர்களையும் வழங்கியுள்ளது.
இந்த வழங்கல்கள் மூலம், இந்து-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்கரை பாதுகாப்பு கப்பல்களின் குறிப்பிடத்தக்க உரிமையாளராகவும் இயக்குநராகவும் இலங்கை மாற்றப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த வழங்கல்களை மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண திட்டங்களை மேம்படுத்துவதாகக் காட்டினாலும், கப்பல்களின் செயல்பாட்டு வரலாறு மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மறைமுகமான நோக்கங்களுக்கான சான்று பகர்கிறது. அதிக தாங்குதிறன் கொண்ட இரண்டு ‘ஹாமில்டன்’ வகை கப்பல்கள் ஆழ்கடல் கண்காணிப்பு மற்றும் திறந்த கடல் நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமான ரோந்துக் கப்பல்களாகும்.
இவை கடலோரப் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், அமெரிக்க கடற்படையின் போர் குழுக்களுடன் பொதுவாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களாகும். இவை அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் நடவடிக்கைகளுக்காக இலங்கையை ஒருங்கிணைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.South Asians & Diaspora
இந்தக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கூட்டுப் பணிக்குழுவின் கீழ் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலை ஒதுக்கியுள்ளது.
இந்தக் கூட்டுப் பணிக்குழுவானது கூட்டு கடல்சார் படைகளின் கீழ் வருவதுடன், இது பஹ்ரைனின் மனாமாவைத் தலைமையகமாகக் கொண்ட அமெரிக்க கடற்படையின் மத்திய கட்டளைப் பீடம் மற்றும் அமெரிக்க ஐந்தாவது படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றும் அமெரிக்க கடற்படை வைஸ் அட்மிரல் ஒருவரால் வழிநடத்தப்படுகிறது.
இதன் மூலம் தெரிவிக்கப்படுவது, இலங்கை கடற்படை அதிகாரிகளும் கப்பல்களும் தற்போது அமெரிக்கா தலைமையிலான கட்டளைக் கட்டமைப்புகளின் கீழ் நேரடியாகச் செயற்படுகின்றன என்பதாகும். இது அமெரிக்காவின் கட்டளை கட்டமைப்பிற்குள் இயங்கக்கூடிய ஒரு கடற்படையை அவர்களுக்கு வழங்குகிறது.
உயர் மட்ட நடவடிக்கைகளுக்காக அமெரிக்கக் கப்பல்களை விடுவிக்கிறது; இதன் மூலம் நமது ராணுவத்தை அமெரிக்க யுத்த இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றுகிறது. இந்த ஒருங்கிணைப்பின் உச்சக்கட்டமாக, 2025 ஜனவரியில் இலங்கை கூட்டுப் பணிக்குழு 154 (CTF 154) இன் கட்டளைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
அமெரிக்க ஐந்தாவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் இந்த பன்னாட்டு கடல்சார் பயிற்சி பணிக்குழு, மத்திய கிழக்கு முழுவதும் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குப் பொறுப்பாகும். இது தேசிய கௌரவத்தின் அடையாளமாக அல்லாமல், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் சட்டபூர்வத்தன்மையை வழங்கும் மற்றும் அமெரிக்க மூலோபாய இலக்குகளுக்குள் இலங்கையை மேலும் சிக்கவைக்கும் ஒரு செயலாகவே அமையும்.இலங்கை செய்திகள்
2025 நவம்பரில், இலங்கை ஆயுதப் படைகளுக்கும் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படைக்கும் இடையே அரச கூட்டாண்மைத் திட்டத்தின் (SPP) கீழ் ஒரு பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, இது இலங்கைக்குள் அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சாக்குப்போக்காகும்.
இது அணிசேராக் கொள்கை அல்ல. இது ஒரு தரப்புடன் இணைந்து போவதாகும். இது அமெரிக்காவின் இந்து-பசிபிக் மூலோபாயத்திற்கு முழுமையாக அடிபணிவதாகும்; இது ஒரு காலத்தில் நமது வெளியுறவுக் கொள்கையை வரையறுத்த இறையாண்மை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய கொள்கைகளை கேலிக்குள்ளாக்குகிறது.
அமெரிக்காவுடனான இந்த இணக்கம் உடனடி ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, எமது நீண்டகால நண்பனான ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இலங்கையை இழுத்துச் செல்லும் அபாயத்தை இது உருவாக்குகிறது.
அதனால் ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கை அரசாங்கமும் ஆயுதப்படைகளும் உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும். பஹ்ரைன் மற்றும் செங்கடலில் உள்ள அமெரிக்க கட்டளை அதிகாரிகளிடமிருந்து இலங்கை அதிகாரிகளைத் திரும்பப் பெறுவது உட்பட, அமெரிக்க இராணுவத்துடனான அனைத்து கூட்டு இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
இரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய-இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் சமீபத்திய அமெரிக்க, அரச கூட்டாண்மை திட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் குறித்தும் முழுமையான வெளிப்படுத்தலைச் செய்ய வேண்டும். இந்த இராணுவ ஒப்பந்தங்கள், அமெரிக்கப் படைகளுக்கு இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் இராணுவ உட்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கக்கூடிய முழுமையான படைகளின் நிலை ஒப்பந்தத்திற்கு (சோபா) வழிவகுக்கின்றனவா என்பது குறித்து பாராளுமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வெளிநாட்டு சக்திகளின் புவிசார் அரசியல் அபிலாஷைகளுக்கு அல்லாமல், இலங்கை மக்களின் தேவைகளுக்குச் சேவை செய்யும் உண்மையான அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என சோசலிச மக்கள் முன்னணி கேட்டுக்கொள்கிறது.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றத்திற்கான ஒரு தளத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் போரை நோக்கிய இந்த சாய்வுக்கும் நமது தேசிய சுதந்திரத்தை அடகு வைப்பதற்கும் எதிராக ஒன்றிணையுமாறு அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசப்பற்று மற்றும் ஜனநாயக சக்திகளிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.





