ஈழத்தமிழர்களுக்காக முன்னின்று செயற்பட்டவர் நல்லகண்ணு ஐயா: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல்!

2009 ஆம் ஆண்டு தமிழ்த் தேசத்துக்கு எதிராகச் ஸ்ரீலங்கா அரசு ஈவிரக்கமற்ற யுத்தத்தை நடத்தித் தமிழினப் படுகொலையை நடாத்திக் கொண்டிருந்த போது தமிழகம் அதற்கெதிராகக் கொந்தளித்தது. அப்போது தமிழகத்தின் பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து மக்களை ஒன்றுதிரட்டிப் பெரும் போராட்டங்களை நடத்திய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைத் தோற்றுவித்ததில் நல்லகண்ணு ஐயா ஆற்றிய பங்கு அளப்பரியது. அதுமட்டுமல்லாமல் ஐதராபாத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இடம்பெற்ற போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதில் முன்னின்று உழைத்த பெருமகனார் நல்லகண்ணு ஐயாவை நாம் இன்று கனத்த இதயத்துடன் நினைவிற் கொள்கிறோம் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக  அவர் இரங்கல் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும்தலைவர் இ.நல்லகண்ணு ஐயா தனது 101 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி ஈழத்தமிழ் மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் அடக்குமுறைகளுக்கும், பெரும் பண்ணையார்களின் குடியானவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், சாதியத் தீண்டாமைகளுக்கும் எதிராக எண்ணற்ற பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியமைக்காக ஏழு ஆண்டு காலம் கொடும் சிறைவாசம் அனுபவித்தவர். சிறைவாசம் அவரது கொள்கை உறுதியை மேலும் புடம் போட்டது. விடுதலையான பின்னர் முன்பை விடச் சமத்துவ சமுதாயம் காண்பதற்கு வேகமாகவும், தீவிரமாகவும் அவர் களப் பணியாற்றியதை உலகத் தமிழர்கள் என்றும் நினைவிற் கொள்வார்கள்.