உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த சிறிலங்கா கடற்படை!

மேற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பானிய தற்காப்புப் படையின் போர்க்கப்பலில் திடீரென நோய்வாய்ப்பட்ட வீரர் ஒருவர், இலங்கை கடற்படையினரின் துரித நடவடிக்கையினால் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்குச் சொந்தமான “JMSDF ONAMI” என்ற போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய குழு உறுப்பினர் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, கப்பல் தரப்பிலிருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அவசர உதவி கோரப்பட்டது.

இந்த அறிவிப்பு கிடைத்தவுடன், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு போர்க்கப்பல் மருத்துவக் குழுவுடன் உடனடியாக குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடுக்கடலில் வைத்து நோயாளியைப் பொறுப்பேற்ற இலங்கை கடற்படையினர், அவருக்குத் தேவையான அடிப்படை முதலுதவிகளை கப்பலிலேயே வழங்கினர்.

குறித்த நபர் 06ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு விரைவாகக் கொண்டு வரப்பட்டார்.

துறைமுகத்தை வந்தடைந்ததும், அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் சர்வதேச கப்பல் பணியாளர்கள் மற்றும் உள்நாட்டு மீனவ சமூகத்திற்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்க கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.