மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள வாகனங்களின் எரிபொருள் தேவையைத் துல்லியமாகக் கண்டறிய அரசாங்கம் விசேட தரவு சேகரிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
உணவு விநியோகச் செயற்பாடுகளைத் தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கும், எரிபொருள் விநியோகம் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது துல்லியமான தரவுகளைப் பயன்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தரவு சேகரிப்புத் திட்டமானது பிரதானமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இலக்கு வைத்துள்ளது.
அதாவது, போக்குவரத்து அல்லது விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இதுவரை எந்தவொரு அமைச்சின் கீழோ அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ பதிவு செய்யப்படாத விநியோகத்தர்கள் மாத்திரம் இதில் உள்வாங்கப்படவுள்ளனர்.
அத்துடன், ஏற்கனவே அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு கட்டமைப்பில் பதிவு செய்துள்ள விநியோகத்தர்கள், அந்தந்த உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிகளையே பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முழுமையான உணவு விநியோகத் துறையின் எரிபொருள் தேவையைக் கணித்தல், விநியோகத்தர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களை இனங்காணுதல் மற்றும் திரட்டப்படும் தரவுகளின் அடிப்படையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் பரிந்துரைகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய இலக்குகளை கொண்டுள்ளது.
தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் இந்தத் தகவல்கள் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
விநியோகத்தர்கள் தமது தரவுகளை வழங்குவதற்கு https://forms.gle/EPPu4bciG6onEptT9 எனும் இணையத்தளத்தினூடாக உட்பிரவேசிக்க முடியும்.
அதேநேரம், உணவு விநியோகத் துறையின் எதிர்காலத் திட்டமிடலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.




