கொழும்பு நீதிவான் நீதிமன்ரில் வைத்து சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடந்த மே மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை செய்யப்பட்டதன் பின்னர் சுமார் மூன்று மாதங்களாக அவர் நாட்டினுள் ஒழிந்திருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் இஷாரா செவ்வந்தி நாட்டினுள் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். நேபாளத்தில் அழைத்துவரப்பட்ட 6 பேரில், இஷாரா செவ்வந்தி (26), டம்மி இஷாரா என அறியப்படும் தக்ஷி நந்தகுமார் (23), ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை (35), ஜப்னா சுரேஷ் எனப்படும் ஜீவதாசன் கனகராசா ஆகியோரிடம் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு நீதிவான் நீதிமன்ரில் வைத்து சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலககும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடந்த மே மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக தெரியவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் பக்கம் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் திசை திரும்பியிருந்த போது, குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட செவ்வந்தி மித்தெனியவிலிருந்து தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் என்னும் அரச அதிகாரியுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கிருந்து ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளையுடன் மீன்பிடி படகின் மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
‘கனேமுல்ல சஞ்சீவ’ நீமன்றத்தினுள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றத்தினுள் துப்பாக்கியை கொண்டுவந்தவர் செவ்வந்தி என்றும், அப்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த பாதாள உலகக்குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் ஆலோசனைக்கமையவே மேற்படி குற்றச்செயலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவம் இடம்பெற்ற தினமே பிரதான துப்பாக்கி தாரியும், செவ்வந்தியும் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், எனினும் துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூன்று மாதகாலமாக செவ்வந்தி நாட்டினுள் பல இடங்களில் தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளார். மதுகம, மாத்தறை மற்றும் வவுனியா போன்ற இடங்களில் அவர் தலைமறைவாகியிருந்ததாகவும் அதன்பின்னர் ஜே.கே. பாய் உடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார். இதற்காக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மனுதினபத்மசிரி பெரேரா என்னும் கெஹல்பத்தர பத்மே ஜே.கே. பாய் என்னும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு ஒரு கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை வழங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு சென்ற செவ்வந்தி ஒரு மாத காலம் இந்தியாவில் இருந்துள்ளதுடன், பின்னர் இந்தியாவில் உள்ள ஆட்கடத்தலில் ஈடுபடும் குழுவினரால் இந்திய பெண் என கூறி நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இந்தியாவிலிருந்த நேபாளத்திற்கு செல்ல சுமார் 6 அல்லது 7 நாட்கள் எடுத்துக் கொண்டது எனவும், புகையிரதம், பஸ் மற்றும் வாடகை வாகனங்களில் பயணித்ததாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
செவ்வந்தியை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல் குழுவினர் இந்திய நாட்டு எல்லையில் விடுவித்து எல்லையை தாண்டி நேபாளத்திற்குள் நுழையுமாறு துரத்தியுள்ளனர். பின்னர் நேபாள எல்லைக்கருகில் மேலும் ஒரு குழுவினர் அவர்களை அழைத்துச் செல்வதற்காக அங்கு காத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்படும் வரை தன்னை இந்திய பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டு நேபாளத்தில் தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சந்தர்ப்பத்தில் டுபாயில் இருந்த ஜே.கே. பாய் செவ்வந்திக்கு தேவையான பண உதவிகளை வழங்கியுள்ளதுடன், அவ்வப்போது நேபாளம் வந்து அவரது நலனையும் விசாரித்ததாகவும் செவ்வந்தி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஷாரா செவ்வந்தி நாட்டினுள் தலைமறைவாகியிருந்த காலத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகநபர்கள் மூவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அவரது மனைவியின் தாயார் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேகநபரான “மதுகம ஷான்” என்பவரின் ஆதரவாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.