உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு…!

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (13) மதியம் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர் சுமார் 40 – 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், சுமார் 5 அடி 3 அங்குலம் உயரமுடைய, குட்டையான தலைமுடி கொண்டவர் எனவும், பச்சை நிற சட்டை மற்றும் நீலம், வெள்ளை நிறங்கள் கலந்த சாரம் அணிந்துள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.