ஊழல் விசாரணைகளுக்கு ஆதரவு; நிலக்கரி கொள்வனவு முறைகேடு குறித்து முஜிபுர் ரஹ்மான் சிஐடியில் முறைப்பாடு

முன்னைய அரசாங்கங்களின் காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை  (13) அவர் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்து முறைப்பாடொன்றை கையளித்துள்ளனர்.

நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இது குறித்து விரிவான விசாரணை அவசியம் என வலியுறுத்தினர்.

முன்னதாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான், 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற ஊழல் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

கடந்த கால ஊழல்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர் என்றும், அத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமது தரப்பு முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பழைய ஊழல்களை விசாரிக்க ஆணைக்குழுக்கள் தேவைப்படுகின்ற அதேவேளை, தற்போதைய புதிய அரசாங்கத்தின் கீழ் கடந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி நேரடியாகவும் உடனடியாகவும் விசாரணை நடத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பழைய விவகாரங்களைத் தோண்டி எடுப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்கு வலுசேர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.