எம்.பி சாந்த பத்மகுமாரவுடனான மோதல் – கைது செய்யப்பட்ட காவல் தறை உத்தியோகத்தர் பிணையில் விடுதலை

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ்  ஊடகப்பிரிவு திங்கட்கிழமை (22) வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கடந்த 20ஆம் திகதி  இரவு 10 மணியளவில்  சூரியகந்தை  பொலிஸ்  நிலையத்தில் கடமையை நிறைவு செய்து மோட்டார்  சைக்கிளில்  வீடு திரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை, வழிமறித்த   பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட குழுவினர் தாக்கியுள்ளதாக  கொலொன்ன  பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளித்துள்ளார்.

மேற்படி தாக்குதலுக்குள்ளான பொலிஸ்  உத்தியோகத்தர்  கொலொன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக  சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று  இரவு 10.10 மணியளவில் கொலொன்ன  பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ள எம்.பி சாந்த பத்மகுமார, கெப் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்    பொலிஸ்  உத்தியோகத்தர்  ஒருவரே தனது வாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியதாகத்  தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. வைத்தியசாலை அறிக்கையின்படி, பொலிஸ் உத்தியோகத்தரின் சுவாசத்தில் மது வாசனை இருந்ததாகக்  குறிப்பிடப்படப்படுள்ளது.இருப்பினும் சிறுநீர் மாதிரிப் பரிசோதனையில் அவர்  மது  அருந்தவில்லை என்பது   உறுதியாகியுள்ளது. ஆகையால் மேலதிக உறுதிப்படுத்தலுக்காக அவரது இரத்த மாதிரி  பகுப்பாய்வுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது..

இந்நிலையில், குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எம்பிலிப்பிட்டிய  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட சூரியகந்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் பரிசீலனை செய்த நீதிவான் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதேவேளை, எல்பிட்டிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், எல்பிட்டிய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.