எரிபொருள் கியூ.ஆர் முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமையில் இதுவரையில் சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக சுமார் 20 இலட்சம் பேர் புதிதாக இந்த முறைமையில் இணைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை 60 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

கியூ.ஆர் முறைமையில் பதிவு செய்வதில் காணப்பட்ட அனைத்து தொழில்நுட்பப் பிரச்சினைகளும் தற்போது முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கியூ.ஆர் குறியீடுகளைச் சட்டவிரோதமான முறையில் பதிவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அத்தகைய நபர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் நுகர்வை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது கோரிக்கை விடுத்தார்.