எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவும் வாகன நெரிசல் மற்றும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொதுமக்களுக்கு நேசரும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பொலிஸார் பணியமர்த்தப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் வீதிப்பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டப்ளியு.பி.ஜே.சேனாதீர 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும்  போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகளைப் போலவே இலங்கையிலும் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பினை முறையாகக் முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காகவே கியூ.ஆர் குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், முதல் வாகனப் பிரிவுகளுக்கமைய எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

நாடளாவி ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வாகன வரிசைகள் காணப்படுவதால், அப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துப்  மாவட்ட, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்  கலந்துரையாடி, எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் போதியளவு பொலிஸாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரிசையிலிருந்து விலகி வந்து எரிபொருள் பெறுவதற்குச் சில சாரதிகள் முயற்சிப்பதால் தேவையற்ற மோதல்கள் உருவாகின்றன. எனவே, வரிசையை மீறி வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் எரிபொருள் வழங்க வேண்டாம் என எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம். அதேபோன்று, மோட்டார் சைக்கிள்கள் நடைபாதைகளை மறித்து நிறுத்தி வைக்கப்படுவதால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துக்களும் நிகழக்கூடும். இதனைத் தவிர்க்குமாறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நெருக்கடி நிலைமை இலங்கைக்கு மாத்திரம் உரியதல்ல, இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும். எனவே, அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த எரிபொருள் முகாமைத்துவத் திட்டத்திற்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரிசைகளில் காத்திருக்கும் போது பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள் என்றார்.