எரிபொருள் விலை உயர்வு : பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கத் திட்டமில்லை

எரிபொருள் விலைக்கு அமைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு  திட்டமிடவில்லை. என்றாலும் இந்த தொழிற்சாலையை முன்னெடுத்துச்செல்ல தேவையான பின்னணியை ஏற்படுத்தித் தருமாறு  அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் புதன்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்தியாளர்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறார்கள். இலங்கையில் நூற்றுக்கு  25வீதமான பேக்கரிகள் எரிவாயு மூலமே பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்கின்றன.

அதேபோன்று நூற்றுக்கு 25, 30 வீதமானவர்கள் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்தியே உற்பத்தி செய்கிறார்கள். ஏனையவர்கள் விறகை பயன்படுத்துகிறார்கள்.

என்றாலும் தற்போது எரிவாயு, மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினையை பேக்கரி உரிமையாளர்கள் எதிர்கொண்டுவருகிறார்கள்.

அதேநேரம் தற்போது எரிவாயு மண்ணெண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த  விலை அதிகரிப்புக்கு  அமைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

என்றாலும் அதனையும்விட பாரிய பிரச்சினையாக இருப்பது. பேக்கரி மற்றும் ஹோட்டல்களுக்கு தேவையான எரிபொருட்கள் தற்போது போத்தல்களுக்கு விநியாேகிகப்படுவதில்லை என்பதாகு.

பேக்கரிகளில் இருக்கும் இயந்திரங்களை இயக்குவதற்கு கட்டாயம் டீசல், மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. என்றாலும் அரசாங்கத்தினால் விதி்க்கப்பட்டிருக்கும் ஒழுங்குவிதிகளுக்கு அமைய எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையமும் போத்தல்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில்லை.

எனவே தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விலைக்கு  அமைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு நாங்கள் திட்டமிடவில்லை.

என்றாலும் பேக்கரி உரிமையாளர்களுக்கு தடையின்றி எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம் அதிகமான இடங்களில் தற்போது மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது. அதனால் பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் எமது சங்க உறுபபினர்கள் எங்களை கேட்டு வருகிறார்கள்.

இது எமது பேக்கரி தொழிலுக்கு பாரிய அச்சுறுத்தலாகும். அதனால் தற்போதுள்ள நிலையில் நாங்கள் அரசாங்கத்துக்கு உதவி செய்வதுபோல், இந்த தொழிற்சாலையை முன்னெடுத்துச்செல்ல தேவையான பின்னணியை ஏற்படுத்தித் தருமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.